Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே பின்னத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி இன்று காலை காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை என கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், குடிநீர் விநியோகம் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுவதால், குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பணியில் உள்ள பெண் ஊழியரால் அந்த நேரத்தில் பணியாற்றுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் வகையில், தண்ணீர் ஏற்றும் பணிக்கு ஆண் ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலை இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.