Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா பற்றி விமர்சனம் பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆவேசம்

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா பற்றி விமர்சித்த வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நேற்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசப்பட்டது. தற்போது அதிமுக - பாஜ கூட்டணி உறுதியாகி உள்ளது. ஆனாலும், யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை இரு தரப்பிலும் பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘சட்டமன்ற தேர்தலில் பாஜ அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.

பாஜ தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு, அதிமுக முன்னணி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், பாஜ தலைவர்களை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பாஜ சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதில் அதிமுக முன்னணி தலைவர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், பெரியார், அண்ணாவை விமர்சித்து ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஐடி விங்க் சார்பில் நேற்று முன்தினம் பதில் அளித்தனர். அப்போது, ‘‘பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவை துளியும் ஏற்க முடியாது’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளால் அதிமுக - பாஜ கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று காலை 9.30 மணிக்கு திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 3.30 மணிக்கு திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்றைய கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனாலும், அண்ணாவை இழிவுபடுத்திய வீடியோ குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறினர்.

கூட்டத்தில் பேசிய பல மாவட்ட செயலாளர்கள், தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வரும் பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்யவும் கட்சி தலைமை தயங்க கூடாது என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும் கட்சி தலைமை, வெளியில் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் பகிரங்கமாக பேச மறுத்துவிட்டனர்.

* அண்ணாவை இழிவுபடுத்தி பாஜ வீடியோ வெளியிட்ட விவகாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்ய பலர் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர். வெளியில் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதால் பகிரங்கமாக பேச மறுத்துவிட்டனர்.