நாள்தோறும் கொலை, கொள்ளை, பலாத்காரம் குற்றங்கள் அதிகரிப்பு; தவெக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைவு: நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்
சென்னை: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நாளைய காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அரசை முற்றுகையிட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முற்றிலும் செயலற்றுப் போயுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை திறம்பட கையாண்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஆயுதப்படை மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு தூக்கியடித்த தவெக அரசு, முன் அனுபவமற்ற அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு எஸ்பிக்களாக வடமாநில ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்ததால், தமிழக குற்றச்சூழல் புரியாமல் தவித்து வருகின்றனர். குற்றங்களைத் தடுக்க போதிய திட்டமிடல் இல்லாத காரணத்தால் கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன.
முந்தைய ஆட்சிக்காலத்தில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அண்டை மாநிலங்களுக்கு தப்பியோடிய பிரபல ஏ-பிளஸ் மற்றும் ஏ-கேட்டகிரி ரவுடிகள், தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் தடையின்றி மீண்டும் தமிழகத்திற்குள் ஊடுருவி கட்டப்பஞ்சாயத்து மற்றும் ஆதாயக் கொலைகளில் துணிச்சலாக ஈடுபட்டு வருகின்றனர். தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நாள்தோறும் சராசரியாக 3 கொலைகளும், 10க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார குற்றங்களும் பதிவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குற்றங்களை முன்கூட்டியே கணித்து தடுக்க வேண்டிய மாநில உளவுத்துறையும், மாநகர நுண்ணறிவுப் பிரிவுகளும் தவெக அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை வேவு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதால், ரவுடிகள் எந்தவித பயமுமின்றி பட்டப்பகலில் வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
சென்னை கேளம்பாக்கம் அருகே மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரை தவெக நிர்வாகியான ஏழுமலை கூலிப்படை ஏவி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தாம்பரம் மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் சீனிவாசன், பரத் ஆகியோரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்ததும், மணலி புதுநகரில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டதும் தலைநகரில் தலைவிரித்தாடும் குற்றங்களுக்கு சான்றாக உள்ளன. சென்னை மாநகரில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 தொடர் கொலைகள் அரங்கேறியுள்ளன. தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 2 மாதங்களில் 30 கொலைகளும், மதுரை மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை அடுத்தடுத்து 8 கொலைகளும் நடந்து ரத்த ஆறாக ஓடுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி முதல்வர் விஜய் விளம்பரப்படுத்திய ‘சிங்கப்பெண் சிறப்பு படை’ வெறும் காகித அளவிலான கண்துடைப்பாகவே மாறிவிட்டது. அப்படையில் உள்ள பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் இந்த சிறப்பு படை படுதோல்வி அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒருபுறம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மறுபுறம் வடமாநில கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கண்டெய்னர் லாரிகளில் பணத்தை அள்ளிச் செல்லும் துணிகர சம்பவங்களும், தலைநகரில் தினசரி சராசரியாக 3 வழிப்பறி குற்றங்களும் அரங்கேறி காவல்துறையின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் அடுத்தடுத்து கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் கொந்தகையைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் ஆதிகண்ணன் (24) என்பவர் இன்று காலை பைக்கில் சென்றபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ராஜேஷ்கண்ணன் (41), அவரது மனைவி சிந்துஜா (37) ஆகியோர் தங்கள் வீட்டின் முன் தகராறு செய்த பாண்டித்துரை (31) என்பவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் செங்கல்பட்டு பெருக்கரணை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 அடி உயர மூலவர் மரகத சிலை கொள்ளையடிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை நிர்வாகத்தில் இத்தகைய தொடர் சறுக்கல்களும் தோல்விகளும் நிலவி வரும் சூழலில், முதல்வர் விஜய் தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான பட்ஜெட்டை நாளை (செப். 3) சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நேரத்தில் தவெக அளித்த வாக்குறுதிகளின்படி, காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையினரின் நீண்ட நாள் ஊதிய முரண்பாடுகள் களையப்படுமா, பதவி உயர்வுகளில் உள்ள குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
அதேசமயம் சட்டம் ஒழுங்கு அடியோடு வீழ்ந்து கிடப்பதை சட்டப்பேரவையில் தோலுரிக்க எதிர்க்கட்சிகள் முழுவீச்சில் தயாராகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் தாரகை கத்பட் மற்றும் பாமக சட்டமன்ற தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் தவெக ஆட்சியில் நடந்த தொடர் கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை நீண்ட பட்டியலாக அவையில் முன்வைத்து அரசை கடுமையாக திணறடிக்க திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு வரும் திங்கட்கிழமை முதல்வர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் அனல் பறக்கும் விவாதம் உறுதியாகியுள்ளது.



