Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கொலை, குற்றங்கள் குறையணும்பா... கிடா வெட்டி போலீசார் வேண்டுதல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிப்காட், மானாமதுரை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முயற்சித்தும், ரவுடிகளின் அட்டூழியம் பெருகி வருகிறது. வீடுகளில் கொள்ளை போனதால் நகை, பணத்தை இழந்தவர்கள் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்து வருகின்றனர்.

குற்றவாளிகள் பலரும் சிக்காத நிலையில் கடந்த 4 மாதங்களாக போலீசாரை தூங்க விடாத அளவுக்கு மானாமதுரை, சிப்காட் ஸ்டேஷன்களில் நூறு பவுன் நகைக்கு மேல் கொள்ளை, தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்தை அறுத்து கொலை, வைகை ஆற்றில் கழுத்தை நெரித்து பெண் கொலை என தொடரும் குற்றங்களால் தனியாக இருக்கும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மானாமதுரை போலீசார், ஊர் எல்லை காவல் தெய்வமான தல்லாகுளம் முனியாண்டி கோயிலில் நேற்று காலை 5.40 மணிக்கு இரண்டு ஆட்டுக்கிடாக்கள் வெட்டி சாமி கும்பிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக, காவல் நிலைய வளாகத்திலேயே கிடா வெட்டி போலீசார் வினோத பூஜை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மானாமதுரையிலும் கிடா வெட்டி வழிபாடு நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.