முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தண்ணீர் தேக்கம்
*பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்
ெநல்லை : முன்னீர்பள்ளத்தில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தண்ணீர் தேங்கியதால் கொசுக்கள் உற்பத்தி கூடாரமாகி உள்ளது. பல மாதங்களாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் நெல்லை - நாகர்கோவில் ரயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் கீழ முன்னீர்பள்ளம், ஆரைகுளம், காமராஜ்நகர், ஜெஜெ நகர், ஜோதிபுரமும், மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் மேலமுன்னீர்பள்ளம், சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக கொண்டாநகரத்தில் இருந்து மேலப்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குடிநீர்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் 3ஆண்டுகளுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக வெளியேறி வருகிறது.
இந்த தண்ணீர் தற்போது ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் குளம் போல்தேங்கி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சக்திநகர் பகுதியிலும் தண்ணீர் தேங்கி வருகிறது.
பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கி காணப்படுவதால் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனபெருக்கம் செய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் பல ஆண்டுகளாக பிரதான குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாத நிலை தொடர்கதையாகி வருகிறது.
தண்ணீர் குளம் போல் ேதங்கி கிடப்பதால் பகல், இரவு நேரங்களில் கொசு தொல்லையால் சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் இப்பகு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து ஆண்டுகணக்கில் குடிநீர் வீணாகி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுரங்க பாதை தேவை
சக்திநகர் பகுதியில் இறந்தவர்களை மயானத்துக்கு கொண்டு செல்ல மேம்பாலத்தின் மேலாக செல்ல வேண்டும். இல்லையெனில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டும். தற்போது மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முடியாத நிலை உள்ளது.
ஆகவே இப்பகுதியில் இறந்தவர்களை கொண்டு செல்லும் வகையில் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் வகையில் சுரங்கபாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன்படி அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். இதன்பின்னர் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
