Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அலட்சியம்; மாநகராட்சி பெண் கமிஷனரின் சம்பளம் நிறுத்தி வைப்பு: சிறைக்கு அனுப்புவோம் என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: மும்பையில் பேருந்து நிலைய நில ஆக்கிரமிப்பை அகற்றாத விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அரசு பஸ் நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை பிருஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தாமல் அலட்சியமாக கிடப்பில் போட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்ட கோரிக்கையை முற்றிலும் நிராகரித்த நீதிபதிகள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். விசாரணையின்போது தலைமை நீதிபதி, ‘நாங்கள் அவரை (மாநகராட்சி ஆணையர்) சிறைக்கு அனுப்புவோம், அப்போதுதான் உச்சநீதிமன்ற உத்தரவின் புனிதத்தை அவர் புரிந்து கொள்வார்’ என்று எச்சரித்தார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி ஆணையர் அஸ்வினி சதீஷ் பிடே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்கிய அமர்வு, மாநகராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் இந்த அவமதிப்பு வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ஆணையர் மற்றும் அவரது ஊழியர்களின் சம்பளத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.