விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததாக கூறி நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் கடந்த ஏழாம் தேதி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் அப்பகுதியில் டிரோன் பறந்ததாக கூறி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதனை கண்டு பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக நினைத்து அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்து அங்கு விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை தவறுதலாக புரிந்து கொண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், பொதுமக்களிடம் விளக்கம் அளித்து, தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனவும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர், யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுரை கூறினர்.


