Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மும்பை-புனே விரைவு சாலையில் விபத்து; டேங்கர் லாரியில் இருந்து விஷ வாயு கசிவால் பீதி: 12 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மும்பை - புனே விரைவு சாலையில் எரிவாயு டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 12 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே விரைவு சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் அதிவேகமாக வந்த கெமிக்கல் ஏற்றிவந்த காஸ் டேங்கர் லாரி ஒன்று கண்டாலா மலைப்பகுதியில் உள்ள அதோஷி குகைப்பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக டேங்கரில் இருந்த ‘புரோப்பிலீன்’ எனும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு கசியத் தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் வெடிப்பு ஏற்படும் அபாயம் உருவானதுடன் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்து நடந்த பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடிய விடிய மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தினால் இன்று காலை வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கிய நிலையில், மும்பை நோக்கிச் செல்லும் பாதை முற்றிலும் மூடப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு புனே செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதனால் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணித்த பயணிகள் மற்றும் குழந்தைகள் உணவு, குடிநீர் இன்றி விடிய விடிய சாலையில் தவித்த நிலையில், வாகனங்கள் மிகவும் மெதுவாகவே ஊர்ந்து சென்றன. தற்போது வரை அங்கு இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதால், ‘பாதுகாப்பு கருதி வாகன ஓட்டிகள் விரைவுச் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு’ நெடுஞ்சாலை போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.