திருமணம் மற்றும் குழந்தை குடும்பம் என வந்துவிட்டால் பல பெண்கள் தங்களுடைய வேலை மற்றும் கரியருக்கே முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அகாங்ஷா சௌத்ரி 11 மாதக் குழந்தையுடன் வேலை, மாடலிங் உடன் அழகிப்போட்டியிலும் கலந்து கொண்டு இப்போது மிஸஸ் இந்தியா 2026 பட்டத்தையும் வென்று முடி சூடியிருக்கிறார்.
வாழ்த்துகள்!
ரொம்ப ரொம்ப நன்றி, நிஜமாவே எனக்கு வார்த்தைகளே வரல. இந்த உணர்வை விவரிக்கவே முடியாது. மேடையில் என் தலையில் அந்த கிரீடத்தை வைக்கும்போது, ‘நாம பட்ட கஷ்டத்துக்கும், கடந்து வந்த ஒவ்வொரு பாதைக்கும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைச்சிருச்சு’ அப்படின்னு தோணுச்சு. ரொம்பவே பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு.
உங்களைப் பற்றி சுருக்கமா சொல்லுங்களேன்?
நான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரைச் சேர்ந்தவள். பள்ளிப் படிப்பில் 10ஆம் வகுப்பில் 98% மதிப்பெண்ணும், 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தேன். அதற்குப் பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற SRCC (Shri Ram College of Commerce) கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தேன். தொடர்ந்து CAT தேர்வில் 98.12% மதிப்பெண் பெற்று, இந்தியாவின் முன்னணி மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் (IIM) அகமதாபாத்தில் எம்பிஏ (MBA) முடித்தேன். தற்போது ஒரு பிரபல ‘ நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன்.
படிப்பு, கார்ப்பரேட் வேலை, TEDx ஸ்பீக்கர், சோஷியல் மீடியா கிரியேட்டர்... இதில் ‘மாடலிங்’ துறைக்கு எப்படி?
“மாடலிங் எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிச்ச ஒரு விஷயம். கல்லூரி படிக்கும்போது, அதாவது 2016ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா எலைட்’ (Miss India Elite) பட்டத்தை வென்றேன். அதுக்கப்புறம் ஐ.ஐ.எம் படிப்பும், கார்ப்பரேட் வேலைகளும் வந்ததால் மாடலிங்கிற்கு ஒரு சின்ன பிரேக் கொடுக்க வேண்டியதா இருந்தது. ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த ஆசை மட்டும் மறையவே இல்லை.
7 மாதக் குழந்தை, வேலை அதற்கிடையில் மாடலிங் சவாலாக இருந்ததா?
“நிச்சயம் இது ரொம்ப சவாலானது! கடந்த ஆண்டு தான் எனக்கு ‘அர்ஷிவ்’ என்ற ஆண் குழந்தை பிறந்தான். பிரசவத்திற்குப் பிறகு உடம்பை மீண்டும் ஃபிட்டாக மாற்றுவது, உணவுக்கட்டுப்பாடு, ரேம்ப் வாக்கிற்குத் தயாராவது என எல்லாமே சவால்தான். பல மணி நேரம் ஹை ஹீல்ஸ் (High Heels) போட்டுக்கொண்டு நிற்கும்போது உடம்பு வலிக்கத்தான் செய்யும். ஆனால் என் இலக்கில் நான் தெளிவாக இருந்தேன். இதற்கிடையில் தாய்ப்பால் கொடுக்க என் குழந்தைக்கு நான் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். இதை எல்லாம் கடந்து இந்த கிரீடம் கிடைக்கும் போது அப்படி ஒரு சந்தோஷம்”.
இந்த வெற்றிக்கு பின்னணியில் இருந்த உங்க மிகப்பெரிய பலம் அல்லது சப்போர்ட் யாரு?
என் குடும்பம்தான். என் அப்பா ஹீராராம் சௌத்ரி (சர்வதேச சைக்கிளிங் வீரர்) மற்றும் தாய் சுமன் சௌத்ரி எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் மற்றும் என் மாமியார் எனக்கு மிகப்பெரிய தூணாக இருந்தார்கள். போட்டிக்கான பயிற்சிகள் ஆரம்பித்த போது, 7 மாதக் குழந்தையை விட்டுவிட்டு நான் பயிற்சிக்குப் போகும்போது, என் அம்மாவும் மாமியாரும் குழந்தையை ரொம்ப அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். அவங்க சப்போர்ட் மட்டும் இல்லைனா என்னால் இதை சாதிச்சிருக்கவே முடியாது.
சமூகத்தில் பொதுவாக திருமணம், குழந்தை என்று வந்துவிட்டாலே பெண்களின் கனவுகள் தடைப்படும் என நினைக்கிறார்கள்... உங்கள் கருத்து என்ன?
“அது முற்றிலும் தவறான எண்ணம். திருமணமும் தாய்மையும் பெண்களின் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி கிடையாது; அது ஒரு புதிய தொடக்கத்தின் பாதை. ஒரு பெண்ணால் தாயாகவும் இருக்க முடியும், அதே நேரத்தில் தன் இலக்குகளை அடைபவளாகவும் இருக்க முடியும். சரியான திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் குடும்பத்தின் ஆதரவு இருந்தால், நாம் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் அருமையாக பேலன்ஸ் செய்ய முடியும்”.
உங்களது அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் இலக்குகள் என்ன?
அடுத்ததாக சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராகி வருகிறேன். அதே சமயம், சோஷியல் மீடியா மூலமாகவும் (எனக்கு 4-5 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்), TEDx மேடைகள் மூலமாகவும் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்.
நம் நாட்டு பெண்களுக்கு நீங்க என்ன செய்தி சொல்ல விரும்புறீங்க?
“உங்க கனவுகளை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காதீங்க. திருமணம் அல்லது குழந்தை பிறப்பு என்பது உங்களது அடையாளத்தை அழிக்கக்கூடாது. சுயநம்பிக்கையோடு அடி எடுத்து வையுங்கள், உங்களது உழைப்பை நம்புங்கள்... உங்களுக்கான தனி அடையாளத்தை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்!
ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியிலிருந்து.
மொழிபெயர்ப்பு : ஆ. கவின்



