Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எதற்காக எம்.பி.க்கள் கூட்டம்?

தமிழகத்தில் தற்போது காவிரி நீர், மேகதாது பிரச்னை, விவசாயிகள் போராட்டம், தொழில்துறையில் பின்னடைவு என பல பிரச்னைகள் நிலவுகின்றன. இதை எல்லாம் ஆளும் தவெக அரசு கண்டுகொள்வதாக இல்லை. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப திடீரென தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி நாடகமாடியுள்ளது. கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

காவிரி பிரச்னையில் கர்நாடக காங்கிரசை காப்பாற்ற, தவெக அரசால் தொகுதி மறுவரையறை கூட்டம் நடத்தப்பட்டதோ என்கிற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி கூட்டம் மட்டுமின்றி,தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் அழைப்பினை ஏற்று அப்போது சென்னைக்கே 5 மாநில முதல்வர், பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் காரணமாக அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

பாஜ ஆட்சிக்கு வந்தபிறகு முதன் முதலாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டது என்றால், அது தொகுதி மறுவரையறை மசோதா தான். அதில் திமுகவின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது. அந்த மசோதா மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக பாராளுமன்ற மினிட்டில் தகவல் கூட இல்லை. இந்நிலையில் தவெக அரசு, அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியது விந்தையாக உள்ளது.

அதிலும் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சி எம்.பி.க்களை வைத்து கொண்டு, தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட, அவர்கள் தீர்மானித்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் திமுகவின் முதுகில் குத்திவிட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியானது, தற்போது தவெக பக்கம் நின்று கொண்டு, திராவிட கட்சிகள் குறித்து எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் திண்டாடுகிறது.

இந்திய அரசியல் களத்தில் தற்போதைக்கு சிஜேபியின் எழுச்சி, இந்தியா கூட்டணியில் விரிசல், பாஜவின் பலம் ஆகியவற்றை அனுமானிக்க முடியாமல் காங்கிரஸ் திண்டாடுகிறது. இந்திய அளவில் திமுகவின் அடுத்த கட்ட செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் தங்கள் தூதுவரான தவெக மூலம் சில அரசியல் சதிராட்டத்தை நடத்திட முற்பட்டுள்ளது.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதமே துருப்பிடித்த தொகுதி மறுவரையறை விவகாரமாகும். தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் தமிழக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கம்யூனிஸ்டுகளும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்னைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தினமும் கோரிக்கை வைத்து வருகின்றன. சட்டசபையில் கூட அனைத்து கட்சிகளும் அதற்காக குரல் கொடுக்கின்றன. ஆனால் காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்கும் தமிழக முதல்வர், தொகுதி மறுவரையறைக்காக கூட்டம் போடுவது தேவையில்லாத ஆணிகளை பிடுங்க முற்படுவதாகும். இப்போதைக்கு எது பிரச்னையோ, அதற்கான விவாதமே தமிழகத்தின் நலனை காப்பதாகும்.