சுழன்று கொண்டிருக்கின்ற இந்த பூமி பந்து எத்தனையோ செய்திகளை நாளும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. சுற்றிக்கொண்டு இருப்பது தான் அதன் இயக்கம். இயக்கம் தான் வாழ்க்கை.இந்த சுழற்சியில் எந்த பக்கமும் சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்துக் கொண்டால் பல தீய விளைவுகளைத் தவிர்த்து விடலாம்.
மனித ஆற்றலின் மகத்துவம் தான் கணிப்பொறி. ஒரு கணிப்பொறியின் இயக்கம் என்பது இயந்திரத்தால் மட்டுமல்ல, அதற்குள் நாம் கொடுக்கின்ற உள்ளீடு(இன்புட்) இது நன்றாக இருந்தால் தான் வெளியீடு (அவுட்புட்) நன்றாக இருக்கும். மாணவப் பருவமும் இப்படித்தான் இப்போது நீங்கள் இருந்து கொண்டிருப்பது இன்புட் பருவத்தில் இந்த வயதில் எவ்வளவு ஆற்றலை கற்றுக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் எதிர்கால வாழ்க்கை ஆற்றல் மிக்கதாக இருக்கும். எதைக் கொடுக்கப் போகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்து தான்.
கொடுப்பதுதான் வெளியில் வரும்.
ஒரு பயிரோ, செடியோ, மரமோ எதுவானாலும் அதனுடைய ஆரம்பக் காலகட்டத்திலேயே நல்ல ஊட்டம் கொடுத்தால் அதனுடைய வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்ட, பிறகு எவ்வளவு ஊட்டம் கொடுத்தாலும் அதில் முழுமை இருக்காது என்று சொல்லுவார்கள். இந்த சிந்தனை, பயிர்களுக்கு மட்டுமல்ல, இளமைப்பருவத்துக்கும் இது பொருந்தும்.
சேக்கிழார்பெருமானை நோக்கி சோழ மன்னர் கேட்டார். இறைவன் எங்கே இருக்கின்றான்?எந்த திசையைப் பார்க்கிறார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றார்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையைப் பெரியபுராணமாக எழுதிய சேக்கிழார் இக்கேள்விகளைக் கேட்டுத் திகைத்துப் போனார்.
எத்தனையோ பெயர்களில் வடிவங்களில் இறைவனை வழிபடுகிறார்கள்.அப்படியிருக்க இறைவன் எங்கே இருக்கின்றான் என்றால் என்ன சொல்வது.எத்தனையோ கோடி அண்டங்கள் இதில் இறைவன் எந்தத் திசையை பார்க்கிறான் என்று எப்படிச் சொல்வது. என்ன செய்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்?
குழம்பிய மனதுடன் வீடு திரும்பினார் சேக்கிழார். அவரது குழப்பம் கண்டு அவரது பேத்தி விசாரித்தார். குழந்தையிடம் நடந்ததை எப்படி விவரிப்பது. இருப்பினும் நடந்ததைச் சொன்னார்.
மறுநாள் அரண்மனைக்குச் சென்ற சிறுமி மன்னனைக் கண்டாள். அவர் சேக்கிழாரின் பேத்தி என்று அறிந்த மன்னன் மகிழ்வுடன் வரவேற்றான். சிறுமி கேட்டார், அரசே உங்கள் முதல் கேள்வி என்ன? இறைவன் எங்கே இருக்கிறார்? ஒரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வரச் சொன்னாள் சிறுமி. அரசே இந்த பாலில் இனிப்புச் சுவை மேற்புறத்தில் உள்ளதா?கீழே உள்ளதா? பக்கவாட்டில் உள்ளதா?
“எல்லா இடத்திலும் உள்ளது”என்றார் மன்னர். அது போன்று தான் இறைவனும் அனைத்திலும் உள்ளார். எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார். வியப்படைந்த மன்னனிடம் இரண்டாவது கேள்வி என்ன? என்றாள்.
இறைவன் எந்தத் திசையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
குத்துவிளக்கு ஒன்றை ஏற்றச் சொல்லிவிட்டுச் சிறுமி கேட்டாள். அரசே! இந்த விளக்கின் சுடர் எந்தத் திசையை பார்க்கிறது?அது எல்லாத் திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இறைவனும் எல்லாத் திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதை கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னர் கேட்டார்.
இறைவன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?
தன்னைச் சிறிது நேரம் அரசியாக்கும்படி கேட்டுக்கொண்டாள் சிறுமி.மன்னனும் சம்மதித்தார். சிம்மாசனத்தில் அமர்ந்தாள். சிறுமி கட்டளை ஒன்றைப் பிறப்பித்தாள்.யாரது அங்கே! இவர்களையெல்லாம் சிறையில் அடையுங்கள்,சிறையில் உள்ளவர்களை எல்லாம் விடுதலை செய்யுங்கள். இவர்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து ஏழைகளுக்குக் கொடுங்கள்.
என்ன இது? என்றார் மன்னன். இதைத்தான் இறைவன் செய்து கொண்டிருக்கிறார். மேலே இருப்பவனை கீழே தள்ளுகிறார். கீழே இருப்பவனை மேலே கொண்டு வருகிறார். உலகம் ஒரு சக்கரம்.இது இடைவிடாமல் சுழல்கிறது.அந்த சுழற்சியில் மேலே இருப்பது கீழே வருகிறது.கீழே இருப்பது மேலே போகிறது.அடுத்த சுற்றில் இது மாறுகிறது.
சுற்றும் பூமி சொல்வது இதுதான். காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவும் சாத்தியமே.அதனாலேயே மூன்று தலைமுறை தாழ்ந்தவனும் இல்லை.மூன்று தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை என்ற பழமொழியே உண்டானது.பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழி அல்லவா!
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும் என்பார் சிந்தனையாளர் வில்லியம் ஜேம்ஸ்.அது போன்று தான் மனிதர்கள் தங்கள் இலட்சியங்களையும் மாற்றிக் கொள்கிறார்கள். எத்தகைய இலட்சியமாக இருந்தாலும் இலட்சியத்தை நோக்கி முன்னேறி சென்றால் வெற்றி நிச்சயம். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனத்தில் நரம்பியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெறுவது, பின்னர் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ ஆக மாறுவது, இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாட்டுக்கு சேவை செய்யப் பாதுகாப்புப் படைகளில் இணைவது என்பது தான் கஷிஷ் மெத்வானி தான் இலட்சியம். இவை அனைத்தையும் சாதித்துக் காட்டியுள்ளார்.
குர்முக் தாஸ் மற்றும் ஷோபா மெத்வானி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் கஷிஷ். கஷிஷின் தந்தை பாதுகாப்புத் அமைச்சகத்தின் தர உத்தரவாதத் துறையில் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஆவார். அவரது தாய் ஷோபா மெத்வானி புனேவில் உள்ள ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார்.
கஷிஷ் மற்றும் அவரது சகோதரி இருவரும் ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் படித்தனர். அவர்கள் இருவரும் ஒரு சாதாரண மாணவரைப் போலவே வளர்க்கப்பட்டனர். கஷிஷ் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, மற்றொரு மாணவரின் பெற்றோர் அவரது தாயிடம், “உங்கள் மகள் சாதாரணமானவள் அல்ல, அவள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிப்பாள்” என்று கூறியுள்ளார்.
ஒரு ஆசிரியராக, தனது மகள் ஒரு சாதாரண குழந்தையைப் போலவே வளர வேண்டும் என்று ஷோபா விரும்பினார். அவர் கஷிஷை மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராகவோ அல்லது சிறப்பு வாய்ந்தவராகவோ கருதவில்லை.
கஷிஷின் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த ஷோபா மெத்வானி, “அவள் எல்லாமே செய்ய விரும்பினாள். நாங்கள் அவளைப் பல்வேறு வகுப்புகளில் சேர்த்தோம். பரதநாட்டியம், தபலா உட்பட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாள்.அவரது தந்தையின் இடமாற்றம் காரணமாக, அவளால் எந்தப் பயிற்சியையும் முடிக்க முடியவில்லை.ஆனால், அவள் அதில் தேர்ச்சி பெறாவிட்டாலும், கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதே போதும் என்று நாங்கள் நினைத்தோம்” என்றார் அவரது தாய்.
கஷிஷ் மெத்வானி அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்று, சவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தார்.அதன் பிறகு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.எஸ்.ஸி ஆய்வறிக்கைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரபலமான கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்த பிறகு, அவருக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் கஷிஷின் மனதில் வேறு ஏதோ இருந்தது.
கல்லூரி நாட்களில், கஷிஷ் தேசிய மாணவர் படை (NCC)-யில் சேர்ந்தார். அவர் குடியரசு தின அணிவகுப்பு முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,அணிவகுப்பில் பங்கேற்றார். அங்கு அவர் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, அகில இந்திய சிறந்த மாணவர் விருதைப் பெற்றார்.பிரதமரின் கையால் அந்த விருதைப் பெற்றார்.
கஷிஷ் கூறுகையில், நான் முகாமில் இருந்தபோது, குழுவில் இருப்பது, பயிற்சி செய்வது, அணிவகுப்பு செய்வது இவை அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது. அப்போதே பாதுகாப்புத் துறையில் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நான் முடிவு செய்தேன் என்கிறார்.
இருப்பினும், இந்த பயணம் உடனடியாகத் தொடங்கவில்லை. படிப்பை முடித்த பிறகு,கஷிஷ் அழகுப் போட்டிக்குத் தயாராகத் தொடங்கினார்.அவர் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்று, 2023-ல் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ பட்டத்தை வென்றார்.
அதே நேரத்தில், கஷிஷ் பாதுகாப்புத் துறைக்கான நுழைவுத் தேர்வுக்கும் தயாராகி வந்தார். அவர் தனது நாளை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார். காலையில் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார், மதியம் அழகுப் போட்டிக்குத் தயாரானார்.
புதிய விஷயங்களை முயற்சிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்து, எனக்கு மகிழ்ச்சியைத் தருவதைத் தேர்ந்தெடுப்பதே எனது நோக்கம் என்கிறார் கஷிஷ்.
2024-ல், அவர் ‘பாதுகாப்பு சேவைகள்’ கூட்டுத் தேர்வை எழுதி, அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அதிகாரியாகும் அவரது பயணம் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தொடங்கியது.
கஷிஷுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஒரு பதவிக் காலத்தில் அவர் பட்டாலியன் துணை அதிகாரியாகவும், மற்றொரு பதவிக் காலத்தில் அகாடமி துணை அதிகாரியாகவும் இருந்தார்.தனது சாதனைகளைப் பற்றிப் பேசுகையில் கஷிஷ், “எனக்கு ஒருபோதும் தோல்வி பயம் இருந்ததில்லை.எனக்கு மிகவும் பிடித்ததை நான் செய்தேன். நிலவை அடைய, நட்சத்திரங்களை உங்கள் இலக்காகக் கொள்ளுங்கள் என்று எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. நான் அதையே செய்தேன் என்கிறார். நீ என்ன விரும்புகிறாயோ அதை துணிச்சலுடன் செய்! அதில் தீர்க்கமான இலட்சியத்தை தீர்மானி, அந்த இலட்சியத்தை நோக்கி முன்னேறு வெற்றி நிச்சயம் உனக்கு வசமாகும் என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.


