திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்தவர் முகம்மது. துபாயில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இவரது பெற்றோர் தனியாக வேறொரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முகம்மதின் தாய் திரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கு 60 வயது ஆகிறது. கணவன் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவருக்கு அதிக வருமானம் கிடையாது. துபாயில் உள்ள மகன் எனக்கு மாதம் ரூ.25 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், தாய்க்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க முகம்மதுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முகம்மது கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில்,‘‘ என் தாய் வீட்டில் பசுக்கள் உள்ளன. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவரும் தாய்க்கு செலவுக்கு பணம் கொடுக்கிறார். எனவே என்னுடைய தாய்க்கு நான் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி கவுசர், தந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது குழந்தைகளின் கடமையாகும் என்று கூறி தாய்க்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
