கஞ்சா போதையில் கும்பல் வெறியாட்டம்: வீடு புகுந்து தாய், மகன் உள்ளிட்ட 5 பேருக்கு வெட்டு; ஒருவர் சீரியஸ்
பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் சிவசக்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சந்திரா (52). இவர் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டின் கதவை பூட்டச்சென்றபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர் சந்திராவின் தலையில் வெட்டிவிட்டு பின்னர் அவரது வீட்டுக்குள் புகுந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த சந்திராவின் மகன் ராஜேஷ் என்பவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ராஜேஷுக்கு தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்து ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார். சந்திரா, அவரது மகன் ஆகியோரின் கதறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் தாக்குதல் நடத்திய கும்பல் பைக்குகளில் தப்பிச்சென்றுவிட்டது. இதன்பிறகு தாய், மகன் ஆகியோரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “ஆகாஷ் என்பவரை தேடி வந்ததாகவும் அவர் இல்லை என்று தெரிந்ததும் சந்திரா, அவரது மகன் ராஜேஷ் ஆகியோரை வெட்டிவிட்டு சென்றுள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே அந்த கும்பல், கொளத்தூர் கிரிஜா நகர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தபோது கொளத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் (35), அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன் (26), மனோஜ்கிரண் (32), விஷால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அவர்களையும் வெட்டியுள்ளனர். இதில் கார்த்திக், தமிழ்ச்செல்வனுக்கு தலையில் பலத்த வெட்டு ஏற்பட்டு இருவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், கார்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய கும்பல் அமாவாசை, விக்கி, சின்ன கருப்பு, பெரிய கருப்பு மற்றும் ஜீவா என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் கஞ்சா போதையில் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.