Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தர்மசங்கடம்

மேற்குவங்க அரசியல் புயல் இன்னும் ஓயவில்லை. அங்கு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து எஸ்ஐஆர் பணிகள் நடந்தன. அதன்பின் 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சுமார் 60 லட்சம் பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதை எதிர்த்து முதல்வர் மம்தா உச்ச நீதிமன்றம் சென்றார். எதுவும் நடக்கவில்லை. தேர்தலில் 1500 அதிகாரிகள் இடமாற்றம் குறித்தும் வழக்கு தொடர்ந்தார், வழக்கம் போல் எதுவும் நடக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கையில் அதிக அளவு ஒன்றிய அதிகாரிகள் குவிக்கப்பட்டதை எதிர்த்தும், அதிக அளவு மத்திய படைகள் குவிக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார். வழக்கம் போல் மம்தா மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதே சமயம் சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் பாஜ கட்சி 207 தொகுதிகளில் வென்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. 15 ஆண்டாக ஆட்சி செய்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளுடன் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 215 இடங்களில் வென்று 48 சதவீத வாக்குகளை வைத்திருந்த திரிணாமுல் காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.94 ஆக சரிந்திருக்கிறது.

அங்கு முஸ்லிம் ஓட்டுக்களை பாஜ மட்டுமின்றி காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஏஜேயுபி உள்ளிட்ட கட்சிகள் பிரித்தது மட்டுமின்றி இந்துக்களின் ஓட்டுக்களை பாஜ ஒருங்கிணைத்தது அக்கட்சியின் வரலாற்று சாதனை வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாகவும் திரிணாமுல் காங்கிரசின் பலவீனம் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. மம்தா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 35 அமைச்சர்களில் 22 பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஏன் முதல்வர் மம்தாவே தோல்வி அடைந்துவிட்டார். இப்போது தேர்தல் ஆணையத்தையும், பாஜவையும் குறைகூறுகிறார்கள். ராகுல் தொடங்கி அத்தனை எதிர்க்கட்சி தலைவர்களும் அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் ஆட்டம் காட்டிவிட்டதாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை பா.ஜ தொடங்கி விட்டது. மேற்கு வங்கத்தின் மத்திய பார்வையாளராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். துணை பார்வையாளராக ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில பாஜ மத்திய பார்வையாளராக அரியானா முதல்வர் நயப் சிங் சைனியும், துணை பார்வையாளராக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டு முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை. மாறாக எங்கள் வெற்றி களவாடப்பட்டது. அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எனது கட்சியினர் ஒன்றுகூடி ஒருமித்த முடிவை எட்டுவோம். தேர்தலில் பெரியளவில் வன்முறை நடந்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம் என அமைப்பு ரீதியிலான தாக்குதல்கள் நடந்துள்ளன. நான் என் வாழ்நாளில் இத்தகைய தேர்தலை சந்தித்ததில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இது புதிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா சொன்னது போல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அது அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உண்மை.