பருவமழை மற்றும் பண்டிகை கால தடங்கல்களை மீறி பாதுகாப்பான இடங்களுக்கு 10.75 லட்சம் டன் நெல் நகர்வு: அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு (2019-24) அதிமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டு, திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நடைமுறையில் இருந்தது. அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் வழிகாட்டு முறைகளுக்கு மாறாகவும் விலை அதிகமாகவும் இருந்த ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர், இந்திய உணவு கழக செயல் இயக்குனர் மற்றும் பொது மேலாளர், இரு மாவட்டங்களின் ஆட்சி தலைவர்கள், போக்குவரத்து மற்றும் நிதித்துறைகளின் துணைச் செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டவர்களை கொண்ட மாநில அளவிலான குழு ஆய்ந்து ஒப்புதல் அளித்த பின் மண்டல அளவில் போக்குவரத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, 15.6.2024 முதல் மண்டல வாரியாக குறைந்த விலைப்புள்ளி அளித்த போக்குவரத்து நிறுவனங்களுக்கு போக்குவரத்துக்கு மண்டல அளவில் ஆணைகள் வழங்கப்பட்டன.
இதனால் ஓராண்டிற்கு மட்டும் ரூ.1084.08 கோடி ஒன்றிய மாநில அரசுகளுக்கு மீதமாகியுள்ளது. 1.9.2025 முதல் 31.10.2025 வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மழை மற்றும் பண்டிகை காரணங்களால் ஏற்பட்ட தடங்கல்களையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டது. இயற்கைச் சீற்றங்களை மீறி லாரிகள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும் நெல் நகர்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
