மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை: மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மாநிலம் முழுவதும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் உருவான மோன்தா புயலின் போது ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் அல்லது சிறப்பு அலுவலர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களது தலைமையின் கீழ் மின் பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவில் 15 பேர் அடங்கிய இரண்டு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்பட 5580 பேர் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். அதேபோல், மிக உயர் அழுத்த பாதைகள் மற்றும் மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய 79 குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மழைக்காலத்தில் நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கவும், பணிச்சுமையை சமாளிக்கவும் மாநிலம் முழுவதும் அனைத்து மின்விநியோக மண்டலங்களிலும் கூடுதல் தற்காலிக பணியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கனமழை அல்லது புயல் போன்ற பேரிடர் காலங்களில் மின்தடை, மின் கம்பம் சேதம், மின் பராமரிப்பு போன்ற அனைத்து விதமான வேலைகளையும் களப்பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். கூடுதலாக தற்காலிக ஊழியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. மழைக்காலங்களில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் தற்காலிக பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மண்டலங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் மாநிலத்தில் உள்ள 10 மின் விநியோக மண்டலங்களிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பணியாளர்கள் பொது பணித்துறையின் ஊதிய விதிதப்படி ஒரு நாள் ஊதியம் ரூ.716-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியாளர்கள் 2026ம் ஆண்டு ஜன.31 வரை மட்டுமே பணியாற்றுவர். குறிப்பாக, அதிகப்படியாக பாதிப்புக்குள்ளாகும் மண்டல பகுதிகளில் 4 பணியாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் தேவைக்கு ஏற்ப நியமிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார் .