Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பருவமழைக் காலத்தை ஒட்டி கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்களில் முன்னேற்பாடு பணிகளை செய்ய ஆணை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, இன்று (07.07.2026) தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் நெல் கொள்முதல் செய்து அவற்றைப் பாதுகாப்பாக சேமித்தல், அரவை மற்றும் பல்வேறு செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல், சேமிப்பு, அரவை, போக்குவரத்து மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி விநியோகம் தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணிகள் எவ்வித இடையூறும் இன்றி, சீராகவும், தாமதமின்றியும் நடைபெறுவதை அனைத்து மண்டலங்களும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும்போது, நெல்லின் ஈரப்பத அளவு 17 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து, அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மைத் துறையுடன் இணைந்து நெல் விதைப்பு பரப்பளவினை சரிபார்க்க வேண்டும் எனவும், வருவாய்த் துறையிடன் இணைந்து சிட்டா, அடங்கல் வழங்கும் போது பயிரப்படும் நெல் ரகத்தையும், பயிரப்படும் நெல் பரப்பையும் குறிப்பிட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பத அளவிடும் கருவிகள் (Moisture Meters) அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு, நல்ல செயல்திறனுடன் எப்போதும் பயன்பாட்டிற்குத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், கருவிகளின் துல்லியமான செயல்பாட்டை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, தரமான நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். பருவம் வாரியாக நேரடிக் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பு, அதன் மண்டல வாரியான சேமிப்பு நிலை, நகர்வு மற்றும் கிடங்குகளின் கொள்ளளவு, தற்போதைய இருப்பு, காலியிட வசதி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சேமிப்புத் திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

எதிர்வரும் பருவமழைக்காலத்தையொட்டி, திறந்தவெளி நேரடிக் கொள்முதல் மையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் மழைநீர் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நெல் மற்றும் அரிசி சேமிப்பில் எந்தவித சேதமும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், ஈரப்பதம் கண்டறியும் கருவிகளை போலவே அரிசியின் சேமிப்பு நாள் கண்டறியும் கருவி (Age testing Device) அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள், ஒப்பந்ததாரர்களின் சேவைத் தரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நகர்த்தும் திறன் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெல் மற்றும் அரிசி போக்குவரத்துப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், சாலை மற்றும் இரயில் மார்க்கம் வழியாக நகர்த்தப்படும் நெல் மற்றும் அரிசி இருப்பு விவரங்கள் முறையாக ஒப்புமை செய்து சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

தனியார் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் (MRM) செயல்திறன் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையான நவீன அரிசி ஆலைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்ணயிக்கப்பட்ட அரவைத் திறனை அடைய முடியவில்லை எனும் நிலையில் உபரியாக உள்ள நவீன அரிசி ஆலைகளில் உள்ள பணியாளர்களை அரவைத் திறன் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்துள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு பரவலாக்கம் செய்வதன் மூலம் நவீன அரிசி ஆலைகளின் அரவைத் திறனை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நெல் அரவைப் பணிகள் தடையின்றி நடைபெறுவதையும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் காலக்கெடுவிற்குள் அரவைப் பணிகளை நிறைவேற்றி, பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான அரிசியை உரிய காலத்தில் நகர்வு செய்வதை உறுதி செய்யுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

கழகத்தின் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் அரவை முகவர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட சணல் சாக்குகளை உரிய காலத்தில் மீட்டெடுத்து, தரம் வாரியாகப் பிரித்து முறையாகச் சேமித்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தவிடு (Bran). நொறுங்கல் அரிசி (Brokens) உள்ளிட்ட துணை உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட சணல் சாக்குகள் (Used Gunnies) தேக்கமடையாமல், அவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேரடிக் கொள்முதல் நிலையங்களில் சணல் சாக்குகள், குத்தூசி, எடை கருவிகள், தார்பாலின்கள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணிகள் எவ்வித தடையும் இன்றி சீராக நடைபெற அனைத்து மண்டல அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், அரிசி மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் தரத்தினையும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், உணவுப் பொருட்களின் தரத்தில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாத வகையில், மாதிரிகளை முறையாக பரிசோதனை செய்து, ஈரப்பதம், நிறம், தரம், சேமிப்பு நிலை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தரம் குறைவான பொருட்கள் எவ்வித சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றும், பொதுமக்களுக்கு உயர்தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து கட்டடங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை காலமுறைப்படி பரிசோதித்து பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், கழகத்தின் செயல்திறனை உயர்த்தவும், பொது விநியோகச் சேவையை மேம்படுத்தவும் ஆக்கப்பூர்வமான புதிய திட்டங்கள் தீட்டி, தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்து, பணிச்சுமையைக் குறைத்து, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விரைவாக அமைச்சர் அறிவுறுத்தினார்.

நடைமுறைப்படுத்துமாறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு தடையற்ற தரமான உணவுப் பொருள் விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர் / முதன்மைச் செயலாளர் டாக்டர் பு.உமாநாத், இ.ஆ.ப., தலைமை அலுவலகப் பொது மேலாளர்கள், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள். மண்டல மேலாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள். கட்டுமானப் பிரிவு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.