பருவமழை பாதிப்பு கடன் மதிப்பீட்டின் ஓர் அம்சமாக மாறும்போது: கிராமப்புறக் கடன் வழங்கலில் காலநிலைப் பாதிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டுமா? ராகுல் திரிபாதி, தலைமை தயாரிப்பு அதிகாரி, த்வாரா கேஜிஎஃப்எஸ்
செப்டம்பர் மாதத்தில், கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடிலிருந்து வெளியான ஒரு செய்தி என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அங்குள்ள விவசாயிகள், பயிரிடுவதற்காகக் கடன் வாங்கிய நிலையில், பயிர்கள் வயலிலேயே காய்ந்து கருகிவிட்டதாகத் துணை முதலமைச்சரிடம் தெரிவித்தனர். ஜூன் மாதத்தில் நம்பிக்கையுடன் வாங்கிய கடன், கைகூடாத அறுவடை, ஆனால் தவணை செலுத்த வேண்டிய நாள் மட்டும் தவறாமல் வந்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றன. 2026ஆம் ஆண்டு பருவமழை, இந்தியா முழுவதும் இயல்பான அளவைவிட 12.6 சதவீதம் குறைவான மழைப்பொழிவுடன் நிறைவடைந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இதுவே மிகவும் வறண்ட பருவமாகும். தென் தீபகற்பப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அங்கு நீண்டகால சராசரி மழைப்பொழிவில் 76 சதவீதம் மட்டுமே பதிவானது. மொத்தம் 542 மி.மீ. மழை பெய்தது. 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மழைப்பொழிவுகளில் இது நான்காவது இடத்தைப் பிடித்தது.
ஆனால், ஒவ்வொரு சதவீதப் புள்ளிவிவரத்திற்குப் பின்னாலும், கடன் தவணையைச் செலுத்துவதற்காகத் தனது மாதாந்திரச் செலவுகளை அமைதியாக மறுசீரமைத்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அதனால்தான், பருவமழையை வெறும் வானிலை நிகழ்வாக இனி என்னால் பார்க்க முடியவில்லை. கிராமப்புறக் கடன் வழங்குநரைப் பொறுத்தவரை, அது கடன் மதிப்பீட்டின் ஓர் அம்சம். இதை எவ்வாறு கையாள்வது என்பதே கடினமான கேள்வி.
* இரண்டு தவறான அணுகுமுறைகள்
முதல் அணுகுமுறை,
கடன் வழங்குவதிலிருந்து பின்வாங்குவது. மழை பொய்த்துவிட்டால், அந்த மாவட்டத்திலிருந்து கடன் வழங்குநர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழலாம். அந்தக் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கடன் மிகவும் அவசியமான தருணத்தில் குடும்பங்களைக் கைவிடுவதாகவே அது அமையும். மேலும், மழைப்பொழிவு குறைபாட்டை ஒரே மாதிரியான அளவுகோலாகக் கருதுவதும் தவறாகும். பாசன வசதி கொண்ட பஞ்சாப் கிராமத்தில் மழைப்பற்றாக்குறை ஏற்படுத்தும் தாக்கமும், சித்ரதுர்காவில் மழையை மட்டுமே நம்பி நிலக்கடலை பயிரிடும் விவசாயியின் வயலில் ஏற்படுத்தும் தாக்கமும் ஒன்றல்ல.
இரண்டாவது அணுகுமுறை,
வானிலையை நம்மால் திட்டமிட முடியாத ஓர் அதிர்ஷ்டக் குறைபாடாகக் கருதி அலட்சியப்படுத்துவது. இங்கு கிடைக்கும் ஆதாரங்கள் என்ன சொல்கின்றன என்பதில் கவனமாக இருக்க விரும்புகிறேன். நாங்கள் செயல்படும் பத்து மாநிலங்களின் பொதுவெளியில் கிடைக்கும் மாநில அளவிலான கடன் தவணைத் தவறுதல் தரவுகளில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கடன் சுமை திருத்தங்கள் போன்ற பிற பாதிப்புகளே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை மழைப்பொழிவின் தாக்கத்தை மறைத்துவிடக்கூடும்.
இதனால் வானிலைக்கு முக்கியத்துவம் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, நம்மிடம் உள்ள தரவுகள் மிகவும் பொதுவானவை என்பதையே இது காட்டுகிறது. உண்மையான பதில், மாவட்டம் மற்றும் காலாண்டு அளவிலான தரவுகளிலும், கடன் வழங்குநர்களின் சொந்தக் கடன் திருப்பிச் செலுத்தும் பதிவுகளிலும் இருக்கக்கூடும். அதை முன்கூட்டியே நிராகரிப்பதற்குப் பதிலாக, ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
* ரிசர்வ் வங்கி (RBI) தற்போது தெளிவுபடுத்தியுள்ள விதிமுறைகள்
இது இனி வெறும் மனசாட்சியின் அடிப்படையிலான முடிவு மட்டுமல்ல. 2026ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) NBFC கட்டமைப்பு, கடன் மதிப்பீட்டில் பேரிடர் அபாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பேரிடர் ஏற்படும்போது கடன் பெறுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான கட்டமைக்கப்பட்ட நடைமுறையையும் அது வகுத்துள்ளது.
பேரிடர் நிகழும் தேதியில் 30 நாட்களுக்கு மேல் தவணைத் தவறுதல் இல்லாத வழக்கமான கடன் கணக்குகள் நிவாரணத்திற்குத் தகுதியுடையவை. நிவாரண நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்; 135 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். கடன் வழங்குநர்கள் தாமாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதேவேளையில், கடன் பெறுவோர் அதிலிருந்து விலகிக்கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்புக்கு இணங்கச் செயல்படுத்தப்படும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் வரும் கடன் கணக்குகள், வழக்கமான கணக்கு என்ற வகைப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம். இதற்கு கூடுதலாக 5 சதவீத ஒதுக்கீடு (provisioning) செய்யப்பட வேண்டும். கடனில் 20 சதவீதம் திருப்பிச் செலுத்தப்பட்டவுடன் இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறலாம். மீண்டும் மீண்டும் கடன் மறுசீரமைப்பு செய்வது கூடுதல் எச்சரிக்கையுடன் அணுகப்படுகிறது.
இந்த நிவாரணத்திற்கான அடிப்படை, மழைப்பொழிவின் அளவு அல்ல; தேசிய அல்லது மாநிலப் பேரிடர் நிவாரண நிதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பேரிடர் நிகழ்வாகும். கர்நாடகாவில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அக்டோபர் தொடக்கத்தில், மாநில அரசு 177 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. பயிர் இழப்புகள் சுமார் ரூ.46,300 கோடி என மதிப்பிட்டது. தேசியப் பேரிடர் நிவாரண விதிமுறைகளின் கீழ் மத்திய அரசிடம் நிவாரணமும் கோரியது. இந்தக் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுக்கள் இனி வெறும் கோட்பாடுகள் அல்ல. அவை நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய காலக்கெடுக்களாக மாறிவிட்டன


