குளிர்கால சரும வறட்சி… தவிர்க்கும் வழிகள்!
கைகள், கால்கள் வறண்டு போவது தோலின் ஈரப்பதம் குறைவதால்தான். குறிப்பாக குளிர்காலம், அடிக்கடி சோப்புடன் கைகளை கழுவுவது, அதிகமாக வெந்நீரில் குளிப்பது, அல்லது சரியான மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாதது போன்ற காரணங்கள் வறட்சியை அதிகரிக்கின்றன. இதைத் தடுக்க சில எளிய, ஆனால் பயனுள்ள வழிகள் உள்ளன.
முதலில் குளித்தவுடன் உடனே கையும் காலும் துடைத்து, சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். தோல் ஈரத்துடன் இருக்கும் நேரத்தில் தடவினால் அது நீண்ட நேரம் தோலில் ஈரத்தைத் தக்க வைக்கும். நல்ல தரமான மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்யலாம்.
கைகளில் அடிக்கடி சோப்போ அல்லது சானிட்டைசரைப் பயன்படுத்துபவர்கள் இரவில் தூங்கும் முன் கைகளில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி, பருத்தி கையுறை அணிந்து உறங்கலாம். இதனால் எண்ணெய் ஆழமாக ஊடுருவி வறட்சியை நீக்கும். அதேபோல கால்களில் சுரண்டல், வெடிப்பு இருந்தால் வெந்நீரில் சிறிது உப்பு, லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடங்கள் கால்களை ஊறவைத்து, பின்னர் நன்கு துடைத்து வாஸலின் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவவும். அதன் பிறகு பருத்தி சாக்ஸ் அணிந்து இரவில் தூங்கலாம்.
நீர் அருந்துவது மிகவும் முக்கியம். உடல் உள்ள ஈரப்பதம் குறைந்தால் வெளியே தோல் உலரும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கும். அதோடு பப்பாளி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.
வெந்நீரில் குளிப்பதை குறைத்து, மிதமான வெப்பநிலையிலான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். குளித்தவுடன் உடல் ஈரத்துடன் இருக்கும் நேரத்தில் உடனே லோஷன் தடவுவது நல்லது. சோப்பு பயன்பாட்டுக்கு பதில் ஷவர் ஜெல் போன்றவை இன்னும் பலன் கொடுக்கும்.
கைகள், கால்களில் வெடிப்பு கடுமையாக இருந்தால் ஆலோவெரா ஜெல், தேன் மற்றும் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து தடவலாம். இது இயற்கையாக தோலை சீரமைக்கும். வாரத்திற்கு இருமுறை மிதமான ஸ்க்ரப்பிங் செய்து இறந்த செல்களை நீக்குவது கூட வறட்சியை குறைக்கும்.
- எஸ்.விஜயலட்சுமி