நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும் ஒரு கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவு: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறுவதாக மோகன் பகவத் குற்றம்சாட்டியிருந்தார். இந்துக்களுக்கு எதிரான அட்டுழியங்களை செய்வது வங்கதேசத்தில் தொடர்கதை ஆவதாகவும் எனவே இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும் ஒரு கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவளிக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மோகன் பகவத் ஆதரிக்கும் கட்சி இந்திய அரசியலமைப்பை மாற்றும் பணியை தொடங்கி இருக்கிறது என்றும் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டும் வேலையை செய்கிறது என்றும் கார்கே சாடியுள்ளார். இதே போல் காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சல்களால் கையகப்படுத்தப்பட்டு விட்டது என்று பிரதமர் மோடி கூறியிருக்கும் கருத்துக்கு பதிலளித்த கார்கே முற்போக்குவாதிகளை நகர்ப்புற நக்சல்கள் என்பது மோடியின் வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவே ஒரு பயங்கரவாத கட்சி என்று குறிப்பிட்டிருக்கும் கார்கே பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்களின் வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியினரை பாலியல் வன்முறை செய்வது போன்ற செயல்களை பாஜகவினர் செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.