தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 30ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உள்பட பல பிரபலங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுமார் 7000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக கட்சிகள் தனித்தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதுபோல் கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிக்கும், அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற தொகுதிக்கும் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது.
புதுவையில் பிரதமர் மோடி 3ம் தேதியும், நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்து வருகிறார். இவரது பிரசாரத்தில் எல்லை தாண்டி தனி மனித தாக்குதல் பிரசாரத்தை செய்து வருவதாக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரசாரம் என்பது அதிமுக ஆட்சியில் சாதனைகளையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள், தொகுதி வாரியாக நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதைவிடுத்து மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது மிகுந்த அநாகரிகமானது. அறதிமுக கூட்டணியில் உள்ள பாஜவில் உள்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. கடந்த 3ம் தேதி புதுவையில் ரோடு ஷோவுக்கு வந்த பிரதமர் மோடி, தமிழக பாஜவில் நடக்கும் உள்கட்சி பிரச்னையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் பிரதமர் மோடி, தமிழகத்தில் நடைபெற இருந்த பிரசாரத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்பதை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடி, கடும் அப்செட்டில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் முறை, தேர்தல் பிரசார வியூகம், பிரசாரத்தால் மக்களை கவரும் விதம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்து, வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்கள் இருக்கும் நிலையில் இனி ஒவ்வொரு நாளும் அனல்பறக்கும் பிரசாரத்துக்கு பஞ்சம் இருக்காது.
