பட்டுக்கோட்டை: பிரதமர் மோடியின் வீரத்தை பார்த்து பயந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியை குறைக்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜ சார்பில் நேற்றிரவு பிரசாரம் நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ேபசியதாவது:கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.16 லட்சம் கோடியை தந்தது பிரதமர் மோடி என்பதை யாரும் மறந்து விட முடியாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பிரதமர் மோடி. முன்பெல்லாம் இந்தியா என்றாலே ஏளனமாக, அலட்சியமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போது இமிகிரேசன் ஆபீசில் நமது பாஸ்போர்ட்டை நீட்டினால் இந்தியாவா என்று யாரும் கேட்பதில்லை. மோடியா, மோடியா என்று கேட்கிறார்கள்.
இஸ்ரேல் பிரச்னையில் பிரதமர் மோடி பேசியதை பார்த்து இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி போட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதை பற்றி கவலைப்படாமல் இந்திய பொருட்களை அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு மோடி அனுப்பினார். அதன் விளைவாக இந்தியாவிலிருந்து வரும் எல்லா பொருட்களுக்கும் 50 சதவீதத்திலிருந்து வரியை குறைக்க போகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். அப்படியென்றால் பிரதமர் வீரத்துடன், விவேகத்துடன், தைரியத்துடன் செயல்படுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
