Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

சென்னை: ஓட்டுக்காக மோடி என்ன வேண்டுமானாலும் பேசுவார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தயாநிதி மாறன் எம்பி பேசினார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜ அரசை கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்பி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஓட்டுக்காக மோடி என்ன வேண்டுமானாலும் பேசுவார். 400 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லி, 240ல் தான் வெற்றி பெற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகிய 2 ஜாம்பவான்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது. தற்போதுள்ள மத்திய அரசாங்கம், நிதிஷ்குமாருக்கு ரூ.35 ஆயிரம் கோடியை கொடுத்துவிட்டு, சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம் என்று சொல்லியுள்ளது.

இதன் மூலம் மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ‘ஆப்பு’ வைத்து விட்டார். விரைவில் சந்திரபாபு நாயுடுவும் ஆப்பு வைப்பார். எனவே இந்த அரசு நிற்காது. இதுதான் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, இந்தி பேசாத மாநிலங்களை பழிவாங்குகிறது. வாக்களிக்காதவர்களுக்கும் சிறந்த முதல்வராக நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். அதேபோல், நீங்கள் செயல்படவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓட்டு வரவில்லை என்றதும், பட்ஜெட்டில் திருக்குறளும், தமிழும் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை. மக்களை பற்றிய கவலை ஒன்றிய அமைச்சருக்கு இல்லை. நாம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.35 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் வெறும் ரூ.257 கோடி கொடுத்துள்ளார்கள். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பணம் கேட்டோம். அதுவும் தரவில்லை. தற்போது நம்முடைய நிதியை கொண்டு பணிகள் நடக்கிறது. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

முதல்வர் கொண்டு வரும் அத்தனை திட்டங்களையும் காப்பி அடித்து மத்திய அரசு கொண்டு வருகிறது. வெள்ளப் பாதிப்பின்போது, தமிழகம் வந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது உண்டியலில் காசு போட வந்த ஒருவரை பார்த்து, நீங்கள் போடாதீர்கள். அந்த காசு மாநில அரசுக்கு தான் போகும் என்றார். இதேபோல், நாங்கள் வரி கட்டாதீர்கள். நீங்கள் வரி கட்டினால் டெல்லிக்கு போகும் என்று சொல்லலாமா? சொன்னால் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும்.

இந்தியாவில் படிப்பில், வறுமை ஒழிப்பில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு நிதி ஒதுக்காமலேயே நாம் இங்கு செய்கிறோம். இங்கு அனைவரும் படிக்கிறார்கள். படிப்பதால் கேள்வி கேட்கிறோம். வேலைக்கும் செல்கிறோம். தமிழ்நாடு வலிமையாக இருந்தால் தான் இந்தியா வலிமையாக இருக்கும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு. எங்களை வஞ்சிக்காதீர்கள். ஏமாற்றாதீர்கள். நாங்கள் ஏமாறமாட்டோம். பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ஓட்டு வரவில்லை என்றதும், பட்ஜெட்டில் திருக்குறளும், தமிழும் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை.