சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு விதை விதைத்த கரு நாங்கள்தான். ஒன்றிய அரசில் ஆட்சியில் எங்கள் ஐயா டாடி மோடிதான் உள்ளார். அதிமுக ஆட்சி தவறு செய்யாது என்று நான் கூறவில்லை. சிறு,சிறு தவறு நடக்கும்.
காட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்க கைமாறு கருதாமல் களப் பணிகளை செய்யுங்கள். நமக்குள் கொடுக்கல், வாங்கல் நிறைய இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, மோடியா? இந்த லேடியா என கேட்டு பிரசாரம் செய்து வந்தார். அவரது மறைவுக்கு பின், பாஜவின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற அதிமுக, அவர்கள் சொல்வதுபோல் செயல்பட்டு வந்தார். அப்போது நடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தான் அதிமுக அமைச்சர் என்பதை கூட மறந்து, ‘மோடிதான் எங்கள் டாடி. மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது’ என்று என்று பேசியிருந்தார்.
ராஜேந்திர பாலாஜி பேசிய ‘மோடி எங்கள் டாடி’ டயலாக் அரசியல் களம் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் ஆனது. தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மோடி எங்கள் டாடி என்ற ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பதை பார்த்து அதிமுக தொண்டர்கள் தலையில் அடித்து கொள்கின்றனர். மோடி எங்கள் டாடி என சொல்லும் ராஜேந்திர பாலாஜி பேசாமல் அதிமுகவை பாஜவில் இணைத்துவிடலாம் என தொண்டர்கள் குமுறுகின்றனர்.
