‘தமிழ்நாட்டில் வாழ்வது பெருமையாக உள்ளது’ மோடிக்கு பீகார் தொழிலாளர்கள் பதிலடி: நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் உற்சாகத்துடன் பங்கேற்பு
குன்னூர்: தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை தி.மு.க அரசு மோசமாக நடத்துகிறது என்று பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி குற்றம் சுமத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக பிரதமர் மோடி வெளிப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, திமுக தலைமையிலான அரசு தமிழர்களுக்கும், வட மாநிலத்தவர்களுக்கும் பாகுபாடின்றி பல்வேறு நலத்திட்டங்களையும், வாழ்வாதாரத்தையும் வழிவகுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 30 சதவிகித மக்கள் வடமாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்து வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு வடமாநிலத்தவர்கள் மட்டுமே நீலகிரிக்கு வந்து பணிகள் மேற்கொண்டனர். பின்னர், தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், நீலகிரி மாவட்ட மக்களின் சிறந்த அன்பும் அவர்களின் வாழ்வாதாரத்தையும், மதிப்பையும் படிப்படியாக உயர்த்தியது. குறிப்பாக, தேயிலை விவசாயம், மலைத்தோட்ட காய்கறி விவசாயம், கட்டுமான தொழில் என பல்வேறு தொழில்களிலும் தற்போது சிறந்து விளங்கி வருகின்றன.
பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக வாழ்வாதாரம் தேடி நீலகிரிக்கு மக்கள் வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சேலாஸ் சிறுமலர் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பெரும்பாலும் வடமாநில மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, வடமாநிலத்தவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற சேவைகளை தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், நடப்பாண்டு தேர்தலில் பீகாரில் பாஜ அரசு வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கில் பிரதமர் மோடி பேசி இருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு தொழில்களில் பீகார் மக்கள் தமிழர்களுடன் இணைந்து பணிகள் செய்து வருகிறோம். எங்களுடைய சொந்த ஊரில் கிடைக்காத வருமானம் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது.
ஆகவே நாங்கள் மகிழ்ச்சியாய் வாழ்வது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நாங்கள் வாழ்வதற்கு மிகவும் பெருமை கொள்கிறோம்’’ என்றனர். இவர்கள் பேசிய இந்த கருத்து பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்ததாக முகாமில் கூடிய மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது. பின் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ அட்டையுடன் காத்திருந்து சிகிச்சை பெற்ற வட மாநிலத்தவர்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.