சமூக வலைதளங்களில் பேசுவதற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் மோடியுடன் விவாதிக்க தயாரா?: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் சவால்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க முன்வருமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடி சவால் விடுத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பரப்பி வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடர் நடத்த தயாராக இருப்பதாக சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சமூக வலைதளங்களில் சவால்களை விடுப்பதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை நடத்துவதில் ஏன் காட்டுவதில்லை; கேள்விகளுக்கான பதிலை கேட்கும் கடமையும் எதிர்க்கட்சிக்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் ஒன்றிய அரசு பதிலளிக்கத் தொடங்கும் போதெல்லாம், காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து ஓடி ஒளிந்து வெளிநடப்பு செய்து விடுகின்றனர். ஆதாரமற்ற வெற்று குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்த்துவிட்டு தகுந்த ஆதாரங்களுடன் அவைக்கு வந்து ராகுல் காந்தி விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


