Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தின் நவீன சிற்பி

கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் அரசியல் சுமார் 60 ஆண்டுகாலம் கலைஞர் என்னும் வட்டத்தை சுற்றியே உருண்டோடியது. தேரோடும் திருவாரூரில், ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ஒரு சாமானியர் எதிர்காலத்தில் இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்தார் எனில் அது கலைஞர் கருணாநிதியால் மட்டுமே முடியும். 14 வயதில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்க்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியவர் கலைஞர். இந்தியாவில் ஒரு மாநில கட்சி முதன்முறையாக ஆட்சியை பிடிக்க அண்ணாவுக்கு தளபதியாய் தோள் கொடுத்தவர் கலைஞர்.

இலக்கியம், பத்திரிகை என துறைகள் தோறும் மிளிர்ந்த அவரது எழுத்துக்கள், திரைத்துறையில் வசனக்கர்த்தா, பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், அரசியலில் பேச்சாளர், கட்சித்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என பன்முகம் கொண்டவர் கலைஞர். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது வீரனுக்கு அழகு என்பதை கலைஞரை கொண்டே அடுத்து வரும் சந்ததிகள் களமாட வேண்டும்.

மனிதர்களை மனிதரே இழுக்கும் கை ரிக்‌ஷாக்களை ஒழித்ததோடு, குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள், பார்வையற்றோருக்கு கண்ணொளி திட்டம், நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார். தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி 5 முறை பதவி வகித்துள்ளார். இந்திய அரசியலிலும் கலைஞரின் பங்களிப்பு இல்லாமல் ஆட்சிகள் அமைந்ததில்லை.

அந்தளவுக்கு ஒன்றிய அளவில் செல்வாக்கோடு திகழ்ந்தார். இந்தியாவில் மாநில சுயாட்சிக்கு முதல் குரல் எப்போதுமே தமிழ்நாட்டில் இருந்துதான் எழும். அதற்கு கலைஞர் கருணாநிதியே முழுமுதற் காரணமாக இருந்தார். சுதந்திர தின விழாவில் மாநில முதல்வர்கள் தலைமை செயலகத்தில் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். தேசிய அளவில் சுதந்திர தினவிழாவில் பிரதமரும், குடியரசு தின விழாவில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமை உடையவர்களாக இருந்தபோது, மாநில அரசுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வேண்டும் என கலைஞரே முதலில் குரல் கொடுத்தார்.

விளைவு 1972ம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் மாநில முதல்வர்கள், தலைமை செயலகத்தில் கொடியேற்றுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. சாதி பிரிவினையை ஒழிக்க சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என கலைஞரின் பெயர் சொல்லும் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தை புகுத்தியதும் அவரே.

கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், உயர்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி என கல்வித்துறையிலும் அவரது சாதனைகள் அளப்பறியது. தமிழ் அறிஞர்களுக்கு, அதிலும் வான் புகழும் வள்ளுவரை உலக அரங்கில் மிளிரச்செய்த பெருமையும் கலைஞரையேச் சாரும். சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் திருவள்ளுவர் சிலை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் கருணாநிதி காட்டிய வழியிலே சீரும், சிறப்புமாக செல்கிறது. இப்போதைய திமுக அரசின் திட்டங்கள் எல்லாம் கலைஞர் கண்ட கனவுகளை நனவாக்கிடும் திட்டங்களாகும். நூற்றாண்டை முடித்து, 101வது பிறந்த நாளில் தமிழகத்தின் நவீன சிற்பியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் புகழை மேலும் மாண்புறச் செய்வோம்.