Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தவெகவினர் வற்புறுத்தல்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்புக் குற்றச்சாட்டு!

சென்னை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தவெகவினர் வற்புறுத்துவதாக திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்புக் குற்றம்சாட்டியுள்ளார். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகக் கூறி மிரட்டுவதாகவும், நான் இன்றும், என்றும் திமுகவில்தான் இருப்பேன் எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் முழக்கமிட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்யச்சென்ற போது அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகக் கூறி மிரட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தவெகவினர் வற்புறுத்துகின்றனர். தவெகவிற்கு செல்ல வேண்டும் என்ற வகையில் என்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவில் வலுவாக இருப்போம்.

எவருக்கும் அடிபணிய மாட்டோம். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம். எந்த நெருக்கடிக்கும் அஞ்ச மாட்டோம். எந்த கொம்பனாலும் என்னை தொட்டு அசைத்துப் பார்க்க முடியாது. என்னை ராஜினாமா செய்ய வைக்க முடியாது" என தெரிவித்தார். அப்போது போலீஸ் அராஜகம் ஒழிக என்று அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.