எம்எல்ஏக்களை பர்ச்சேஸ் செய்ய பார்க்கிறார்கள் பாஜ ஆதரவுடன் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை: ‘‘பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி நடக்கிறது. தவெக எம்எல்ஏக்கள் யாரும் விலைபோக மாட்டார்கள்’’ என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஒரு முயற்சி மட்டுமல்ல, அனைத்து இடத்திலும் முயற்சி நடக்கிறது.
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. எல்லா எம்எல்ஏக்களையும் தொடர்பு கொண்டு பர்ச்சேஸ் பண்ணுவது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாரால் பிரச்னை வருகிறது. எங்கள் எம்எல்ஏக்கள் பணத்தை வாங்கிக் கொண்டும், எதையும் வாங்கிக்கொண்டும் எங்கேயும் நகர மாட்டார்கள்.
எங்க எம்எல்ஏக்களுக்கு ரூ.70 கோடி வரைக்கும் ஆபர் கொடுத்து மாட்டிக்கொண்டு கைதாகி நிற்கிறார்கள். அதிகபட்சமான பணம் எம்எல்ஏ பேரத்தில் மாட்டியுள்ளது. இதற்கு ஹவாலா பணம் பயன்படுத்தியுள்ளனர். பெங்களூருவில் பணத்தை சப்ளை பண்ணியிருக்கிறார்கள். எல்லா விசாரணையும் நடந்து வருகிறது.
டிடிவி.தினகரன் ஆளுநரை சந்தித்துள்ளார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எந்த தேர்தல் வந்தாலும் தயாராக தான் இருக்கிறோம். எம்எல்ஏக்களிடம் பண ஆசை காட்டி பல வேலைகள் நடந்துள்ளது. எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் விலை போக மாட்டார்கள். அவர்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு கூறினார்.
* ‘மின்துறை, சிறைத்துறையில் பிரச்னை இருக்கிறது’
‘‘மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்பு கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கால அவகாசம் கேட்டுள்ளோம். மின்சாரத் துறையில் அவ்வளவு இடையூறுகள் உள்ளது. நேற்றிலிருந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். யாருக்கும் தெரியாமல் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என கூறியிருக்கிறோம். ஒவ்வொரு சப் ஸ்டேஷனிலும் எந்த இடத்திலும் தகவல் சொல்லாமல் பல இடத்தில் பிரேக்கரை துண்டிக்கின்றனர்.
இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். இனிமேல் பதிவு செய்யாமல் துண்டித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறைக்காக தனியாரிடம் இருந்து மின் கொள்முதல் செய்ய முடியாது. சிறையில் காவலருக்கும், கைதிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிறைத்துறையில் சீரமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். சிறு, சிறு தகராறுகள் நடக்கத்தான் செய்கிறது. அதனை விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்க தவறு இருக்கிறதோ அங்கு நடவடிக்கை எடுப்போம்’’ என்று நிர்மலகுமார் தெரிவித்தார்.


