சென்னை: இன்னும் 5 மாசத்துல நீங்க எல்லாரும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகப் போறீங்க என்று ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசினார். கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் மகளிர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதை ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது. ராமதாசை அங்கு உள்ளவர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றியம் வாரியாக, ஊராட்சி வாரியாகத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து, அந்த பூத்துகளை பலமாக பலப்படுத்த வேண்டும்.
இன்னும் 5 மாதத்தில் நீங்கள் எம்எல்ஏவாகவோ, ஒரு சிலர் அமைச்சர்களாகவோ ஆகப்போகிறீர்கள் என்று சோர்ந்திருந்த நிர்வாகிகளை உற்சாகமூட்டும் வகையில் அன்புமணி பேசினார். டிச.17ல் போராட்டம்: வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17ம்தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி கூறினார்.
