முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு திருச்சி முதல் மதுரை வரை வைகோ மீண்டும் நடைபயணம்: நடைபயணத்தை தொடங்கி வைக்க அழைத்ததாக பேட்டி
சென்னை: திருச்சி முதல் மதுரை வரை மீண்டும் நடைபயணம் தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ நேரில் சந்தித்தார். அவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வருக்கு அழைப்பு விடுத்ததாக வைகோ கூறினார். மீண்டும் வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். திருச்சியில் இருந்து ஜனவரி 2ம்தேதி வைகோவின் சமத்துவ நடைபயணம் மதுரை நோக்கி தொடங்குகிறது.
போதைப் பொருளுக்கு எதிராவும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்காகவும் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணம், மணப்பாறை-திண்டுக்கல் வழியாக மதுரையை சென்றடையும். இதை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, வைகோ நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவர்களை போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைப்பயணத்தை வரும் ஜனவரி 2ம்தேதி திருச்சி மாநகரில் இருந்து தொடங்க உள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரையில் முடியும் நடைபயணத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
