மிர்சாபூர் படத்தால் எழுந்த விபரீத சர்ச்சை; ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வாங்குவீர்கள்? பாலியல் அழைப்பு பதிவுகளால் நடிகை அனங்ஷா கதறல்
மும்பை: திரையில் நடித்த கதாபாத்திரத்தை நிஜம் என தவறாக நினைத்து ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு பலர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாக ‘மிர்சாபூர்’ பட நடிகை அனங்ஷா பிஸ்வாஸ் வேதனை தெரிவித்துள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான ‘மிர்சாபூர்’ இணைய தொடர் தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த தொடரின் முந்தைய பாகங்களில் ‘ஜரீனா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனங்ஷா பிஸ்வாஸ் அளித்த பேட்டியில், ‘இத்திரைப்படத்தில் முதல் பாகத்தின் தோற்றத்திற்கு மாற வேண்டியிருந்ததால், 4 மாதங்களுக்குள் தனது உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, வெறும் அவித்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தேன்.
இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். திரையில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கை என தவறாக சித்தரித்து பலர் தனக்கு ஆபாச தொல்லை கொடுத்து வருகின்றனர். திரையில் நான் செய்த கதாபாத்திரத்தை (தனது சுய தேவைக்காக பிறருடன் பாலியல் உறவு கேரக்டர்) பார்த்துவிட்டு நிஜத்திலும் நான் அப்படித்தான் இருப்பேன் என பலர் தவறாக நினைக்கிறார்கள். இதனால் எனது சமூக வலைத்தளங்களிலும் மின்னஞ்சலிலும் ‘ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வாங்குவீர்கள்? எங்களோடு இரண்டு நாட்கள் வெளிநாட்டுக்கு வர முடியுமா?’ என்றெல்லாம் கேட்டு அருவருப்பான செய்திகளை அனுப்பி என் இன்பாக்சை நிரப்பி வைத்துள்ளனர்.
மக்களின் இந்த வக்கிரமான மனநிலை மாற வேண்டும் என்பதற்காகவே இதை வெளிப்படையாக பேசுகிறேன். நான் ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித் ரே பிறந்த மேற்கு வங்காள மண்ணைச் சேர்ந்த படித்த பெண். எனக்கு மது அருந்தும் பழக்கமோ, பார்ட்டிகளுக்கு செல்லும் வழக்கமோ கிடையாது. எப்போதும் புத்தகங்களை படிப்பதையே விரும்பும் என்னை இப்படி பேசுவது சாபமாகவும், எனது நடிப்பிற்கு கிடைத்த வெற்றியாகவும் உணர்கிறேன்’ என்று கூறினார்.




