Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நம்பிக்கை செய்யும் அற்புதங்கள்!

நேர்மறை சிந்தனையும்,நம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உங்களால் நிகழ்த்த முடியாது என்று எதுவும் இல்லை. நீங்கள் எதை செய்து காட்ட முடிவு எடுத்து இருந்தாலும் அதை உங்களால் நிறைவேற்ற முடியும்.உங்களைவிட உங்கள் மீது யார் அதிக நம்பிக்கை வைத்திருக்க முடியும். உங்களைவிட யார் உங்களை அதிகம் நேசிக்க முடியும்.தங்களுடைய திறமைகளை சரிநுட்பத்துடன் மதிப்பிடக் கூடியவர்கள் வெகு சிலர்தான். பெரும்பாலானவர்கள் ஒன்று குறைவாகவோ அல்லது மிகையாகவோதான் தங்களை மதிப்பீடு செய்திருப்பார்கள்.

உங்கள் திறமையின் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வாழ்வின் எந்த சவாலையும் உங்களால் எதிர்கொள்ள முடியாமல் போகும்.பெரிதாய் எதையும் நீங்கள் சாதிக்க முடியாது. தன்னைப் பற்றி ஒருவருக்கு உண்டாகும் ஐயப்பாடுதான் வீழ்ச்சிகளில் மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் வெற்றி குறித்து உங்களால் சிந்திக்க முடியும்.அந்த வெற்றியை நீங்கள் அடையவும் செய்வீர்கள். அது உங்கள் நம்பிக்கை செய்கிற அற்புதம்.

மூசா ஒரு வசதியான அரேபியக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். கேம்பிரிட்ஜில் (இங்கிலாந்து) தன்னுடைய படிப்பை முடித்துக் கொண்டு அவர் பாலஸ்தீனத்திற்கு சென்றார். கொஞ்ச காலம் அங்கே வசதியாக வாழ்ந்த பின், ஒரு அரசியல் கிளர்ச்சியின் போது தன்னுடைய வீடு,சொத்து இவற்றை இழந்தார்.பின்பு ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அந்நாட்டின் விளிம்புப் பகுதியான ஜெரிக்கோவைச் சென்றடைகின்றார். அது பாலைவனப் பகுதி எட்டு திக்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணற்பரப்பு விரிந்து கிடக்கிறது.

கொடுமையான வெயிலில் நின்று, கொஞ்சமும் விளைவதற்கு தகுதி இல்லாத நிலங்களை அவர் பார்த்தார்.அரிதாக சில இடங்களில் பாலைவனச் சோலை.இங்கே நீர்ப் பாசனத்துக்கு வழியே இல்லையா? கண்ணில் பட்டவர்களிடம் கேட்டார்.குடிக்கவே தண்ணி கிடையாது என்று விரக்தியில் பதில் வந்தது.ஜோர்டான் நதியை தேக்கி, இங்கேயும் தண்ணீரை திருப்பி விடலாமே என்று கேட்டார். நீரின் போக்கை மாற்ற அணை கட்ட வேண்டும்.நிறைய பணம் தேவைப்படுமே என்றார்கள்.

முன்பு ஒரு முறை மூசா கலிபோர்னியா மாநிலத்திற்கு சென்றிருந்த பொழுது,இதே போன்ற பாலைவனத்தை அவர் கண்டிருந்தார். அங்கே நீர்வளஆய்வாளர்கள் மணற்பரப்புக்குக் கீழே நிலத்தடி நீரை கண்டுபிடித்தது அவருடைய நினைவுக்கு வந்தது.ஜோர்டானிய சேக்குகள், நாங்களும் ஆய்வாளர்களை அழைத்து வந்து ஆராய்ந்து பார்த்து விட்டோம். அது சாத்தியப்படாது என்று முயற்சியைக் கைவிட்டு விட்டோம் என்றனர். ஆனாலும் ஜெரிக்கோ பாலைவனத்தில் நிலத்தடி நீர் இருக்கும் என்று மூசா உறுதியாக நம்பினார்.

அகதிகள் முகாமில் இருந்த ஏழைகள் சிலரின் ஒத்துழைப்புடன், அவர் முயற்சியில் இறங்கினார். மண்ணை அகழ்ந் தெடுக்க அவர்களிடம் எந்திரங்கள் இருக்கவில்லை. ஆனால் கூர்முனை கொண்ட ஆயுதங்களையும், மண்வாரியையும் பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்தார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவர்களுடைய முயற்சி வெற்றியை தந்தது.எல்லையற்ற மணல் வெளியில் ஏராள நீர்ப்பிடிப்பு.

சுற்றுவட்டாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்தார்கள். கண்ணீர் விட்டார்கள். ஆம்! ஆனந்தக் கண்ணீர். அவர்கள் நீரைக் காணவும்,தொட்டுச்சுவைக்கவும் முண்டியடித்தாரகள். முதியவர் ஒருவர் அந்த நீரைப் பருகி விட்டு மூசாவின் தோள்களை பற்றிக் கொண்டு சொன்னார். மூஸா நீ கண்டுபிடித்த நீர் தான் எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது. ருசியாக இருக்கிறது என்றார்.

இன்று மூசாவிற்கு சொந்தமாய் 15 கிணறுகள் அவை மூன்று மைல் நீளமும், இரண்டு மைல் அகலமும் கொண்ட அவருடைய விவசாயப் பண்ணைக்கு நீரை சப்ளை செய்து கொண்டிருக்கின்றன.அங்கே காய்கறிகளும், பழங்களும் பயிராகின்றன. மூசா தொடங்கிய கல்வி நிலையம் பல விவசாயிகளை,தொழில்நுட்ப வல்லுனர்களை, வர்த்தக நிபுணர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கை செய்கிற அற்புதத்திற்கு இன்னொரு உதாரணமாய் இந்தப் பெண் மணியை சொல்லலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில், சிறிய கிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் படித்த பெண், தற்போது ஜப்பானில் வெற்றிகரமாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வெற்றிப்பெண்தான் விஜயலட்சுமி கருப்பசாமி.

தற்போது ஜப்பானில் வசித்து வரும் அவர், FOX Academy என்ற AI எட்டெக் (EdTech) நிறுவனத்தையும், FOX Ventures என்ற நிறுவனத்தையும் நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதோடு தற்போது ‘கிமாரா’ என்ற ஃபேஷன் இணையதளத்தையும் அவர் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி. அவருடைய அப்பா வாழைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா பால்வாடியில் வேலை பார்த்து வந்தார். 12ம் வகுப்பு வரை வீட்டின் அருகில் இருந்த அரசு பள்ளியில் படித்தார். பள்ளிக்குச் செல்வது, அப்பாவுடன் வெளியில் செல்வது, வாரஇறுதிநாட்களில் வாழைத்தோட்டத்தில் வேலைக்குச் செல்வதும், என அவரது உலகம் மிகவும் சின்னதாக, அழகாக இருந்தது.

விளையாட்டு, படிப்பு, என பள்ளியில் ஆல்ரவுண்டராக இருந்த விஜயலட்சுமிக்கு, முதன்முறையாக ரயிலில் பயணம் செய்யும் அனுபவமே, அவர் கல்லூரிக்காக கோவைக்கு சென்றபோதுதான் அமைந்தது. கல்லூரி வாழ்க்கை அதுவரை அனுபவித்திராத வித்தியாசமான உலகம்.தமிழ்வழியில் படித்த அவருக்கு ஆங்கிலம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது.

அந்த சமயத்தில் மீண்டும் விளையாட்டுதான் அவருக்கு கை கொடுத்தது. விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் கல்லூரியில் தனக்கான அடையாளத்தை பெற்றார். சிறு வயதில் இருந்தே ஒரு தொழில்முனைவோராக மாற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக எப்போதும் எழுந்துள்ளது. அவர் 6ம் வகுப்பு படிக்கும் சமயத்திலேயே, தென்னை ஓலையில் விளக்குமாறு செய்து, அக்கம்பக்கத்து கடைகளில் விற்பது போன்ற சிறு, சிறு வேலைகளை செய்யத் தொடங்கி உள்ளார். தனது முதல் வருமானம் 40 ரூபாய், அது இப்போதும் தனக்கு ஞாபகம் இருக்கிறது என்கிறார் விஜயலட்சுமி.

சிறுவயதில் இருந்தே தொழில் மீது அவர் காட்டிய ஆர்வம்தான் அவரை இன்று ஜப்பானில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்ததுமே, எங்கு வேலைக்குச் செல்லலாம், என தேடாமல், நாமே பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என விஜயலட்சுமி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

விஜயலட்சுமி எடுத்த முக்கிய முடிவு!கல்லூரிப் படிப்பு முடித்து, நிறுவனம் ஆரம்பித்து விட்ட போதும், எனது ஆங்கிலத் தயக்கம் அப்படியேதான் இருந்தது. என்னை பயமுறுத்தும் விசயங்களை நேரடியாக மோதி, அதில் வெற்றி காண்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனவே, பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். அதோடு, நான் தூத்துக்குடியிலேயே இருந்து விட்டால், எனது நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதாலும் இந்த முடிவை நான் எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் இது மிகமுக்கிய முடிவு,என தொழில்ரீதியாக தான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த கதையை விவரிக்கிறார் விஜயலட்சுமி.

எனர்ஜி ஆடிட்டிங் கம்பெனியில் ஐந்து வருடம் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு, இலவசமாக பெங்களூருவில் ஓர்க்‌ஷாப்களை நடத்தத் தொடங்கியுள்ளார் விஜயலட்சுமி. ஒரு தொழிலை எப்படித் திட்டமிட வேண்டும், அதற்காக வங்கியை எப்படி அணுக வேண்டும், ஆடிட்டிங் பற்றிய அறிவு என மாணவர்களுக்கு இலவசமாக அந்த ஒர்க்‌ஷாப்பில் அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.

தனது ஒர்க்‌ஷாப்பில் ஐஐடி மாணவர்கள் முதல் பல்வேறு முன்னணி பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இலவச ஒர்க்‌ஷாப்கள் நடத்திய பிறகுதான், இது மாதிரியான துறையில் நல்ல எதிர்கால வாய்ப்பு இருப்பதை விஜயலட்சுமி தெரிந்து கொண்டார்.அதன் தொடர்ச்சியாக, சுமார் இரண்டு ஆண்டுகால ஆய்வுகளுக்குப் பின் அவர் ஆரம்பித்ததுதான் ஃபாக்ஸ் அகாடமி,”என்ற நிறுவனம். ஆரம்பத்தில் இதை இந்திய மாணவர்களுக்காகத்தான் தொடங்கினார்.ஆனால்,அவரது பயிற்சியைப் பற்றி தெரிந்து கொண்ட ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்று அவர்களின் மாணவர்களை விஜயலட்சுமியிடம் பயிற்சிக்காக அனுப்பியது. இதுதான் ஜப்பானுக்கும் அவரது நிறுவனத்திற்கு தொடர்புஏற்படுத்திய தொடக்கப்புள்ளி, என இந்தியாவில் இருந்த தனது நிறுவனம் ஜப்பான் ஸ்டார்ட் அப் ஆக மாறிய கதையைக் கூறுகிறார் விஜயலட்சுமி.

ஜப்பான் பல்கலைக் கழக மாணவர்களையும், இந்திய மாணவர்களையும் இணைத்து விஜயலட்சுமி நடத்திய ஒர்க்‌ஷாப் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன்லைனிலேயே ஜப்பான் மாணவர்களுக்கான வகுப்புகளை நாங்கள் எடுத்தோம். எங்கள் வகுப்புகளில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து, எனது நிறுவனத்தை ஜப்பானுக்கே கொண்டு சென்றால் என்ன என்ற திட்டம் உருவானது. லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் 2022ம் ஆண்டு முதன்முறையாக நான் ஜப்பான் சென்றேன்.அங்கு எனது நிறுவனத்திற்கான சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.

அப்போதுதான், ஜப்பானின் ஸ்டார்ட் அப் விசா பற்றித் தெரிந்து கொண்டேன். டூரிஸ்ட் விசாவில் ஜப்பானில் இருந்து கொண்டே, ஸ்டார்ட் அப் விசாவைப் பெற்றேன். இந்த விசாவைப் பெற்ற முதல் தென்னிந்தியர் நான் தான் என்கிறார் விஜயலட்சுமி.

ஜப்பானின் கொகெய்டோவில் உள்ள சபோரோ நகரில்தான் தற்போது வசித்து வருகிறார் விஜயலட்சுமி.

ஃபாக்ஸ் நிறுவனம் தனக்கான அங்கீ காரத்தை அங்கு பெற்றதும், அடுத்தகட்டமாக ஃபாக்ஸ் வென்ச்சர்ஸ் (FOX Ventures) நிறுவனத்தை நிறுவினார் விஜயலட்சுமி. சிங்கப்பூர் இன்வெஸ்டர்கள் மூலம் ரூ.50 லட்சத்தை இந்நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார்.விஜயலட்சுமியிடம் தற்போது 12 ஊழியர்கள்,பத்து இண்டர்ன்கள் மற்றும் காண்ட்ராக்ட் மெம்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஃபாக்ஸ் அகாடமி, ஃபாக்ஸ் வென்ஞ்சர்ஸ் மட்டுமின்றி தற்போது ‘கிமாரா’ என்ற புதிய நிறுவனத்தோடு ஃபேஷன் மார்க்கெட்டிலும் களமிறங்கியிருக்கிறார் விஜயலட்சுமி. ஏற்கனவே மாடலிங் செய்து வரும் அவர், ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையான கிமானோவை இந்தியர்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, அதனை ஆன்லைனில் விற்பனை செய்ய இருக்கிறார்.

ஜப்பான் போன்ற அயல்நாட்டிற்கு சுற்றுலா செல்வதே பலருக்கும் இங்கு கனவாக உள்ள நிலையில், அங்கு சென்று ஸ்டார்ட் அப் தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, குறுகிய காலகட்டத்திலேயே தொழிலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வரும் விஜயலட்சுமியின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் உங்கள் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள், வெற்றியை குறித்து சிந்தியுங்கள்! உங்கள் சிந்தனை நிச்சயம் வெற்றியை பெற்றுதரும், அது உங்கள் நம்பிக்கை செய்கிற அற்புதம்.