Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஞ்சநேயர் திருக்கோயில் தங்கத் தேருக்கு 9.5 கிலோ தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (11.08.2025) சென்னை, நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் புதிய தங்கத் தேருக்கு 9.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 70 தங்கத்தேர்களும், 60 வெள்ளித்தேர்களும் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், கடந்த நான்காண்டுகளில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 தங்கத்தேர்களும், ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 வெள்ளித்தேர்களும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் பெரியபாளையம் திருக்கோயில் தங்கத்தேர், திருத்தணி மற்றும் சென்னை காளிகாம்பாள் ஆகிய திருக்கோயில்களின் வெள்ளித்தேர்கள் நிறைவு பெற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு வேயும் பணி நிறைவுபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து உபயதாரர் பங்களிப்போடு 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபின், ரூ.75.55 கோடி மதிப்பீட்டில் 130 திருக்கோயில்களுக்கு 134 மரத்தேர்கள் உருவாக்கப்பட்டு வருவதோடு, ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் 72 திருக்கோயில்களில் உள்ள 75 மரத்தேர்கள் மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தேர்களை பாதுகாக்கும் வகையில் ரூ.30.31 கோடி மதிப்பீட்டில் 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆண்டுகளாக பழுதடைந்து ஓடாமல் இருந்த மரத்தேர்கள், தங்கத்தேர்கள் மற்றும் வெள்ளித்தேர்கள் பழுதுநீக்கப்பட்டு உலா வரச்செய்யப்பட்டுள்ளன.

150 ஆண்டுகளுக்கு பின் விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம், அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயில் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருத்தேர்களும், 100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம், அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர், 87 ஆண்டுகளுக்கு பின் சென்னை, சிந்தாதரிப்பேட்டை, அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர், 80 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சீட்டனஞ்சேரி, அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பழுது நீக்கப்பட்டும், 11 ஆண்டுகளுக்கு பின் இராமேசுவரம் மற்றும் சமயபுரம் தங்கத்தேர்களும், 9 ஆண்டுகளுக்கு பின் சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் தங்கத்தேரும் சீரமைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்திடும் வகையில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

திருக்கோயில்களுக்கு காணிக்கையாகப் வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் பயன்படுத்த இயலாத பொன் இனங்களை ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்த தங்க கட்டிகள் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் வட்டியாக ரூ.17.76 கோடி கிடைக்கப்பெறுகிறது. இந்தத் தொகை அந்தந்த திருக்கோயிலின் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, பல்வேறு புதிய திட்டங்களையும், சேவைகளையும் செயல்படுத்தி இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இணை ஆணையர்கள் திருமதி இரா. வான்மதி, திருமதி கி.ரேணுகாதேவி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் என். சந்திரன், துணை ஆணையர் இரா.ஹரிஹரன், உதவி ஆணையர் கி.பாரதிராஜா, திருக்கோயில் தக்கார் எம்.கோதண்டராமன், செயல் அலுவலர் ஆ.குமரேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.