அமைச்சரின் நண்பர்கள் பாலியல் தொல்லை; புகாரை வாபஸ் பெற கூறி கொலை மிரட்டல்: தென்மண்டல ஐஜி ஆபீசில் தவெக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்
மதுரை: அமைச்சரின் நண்பர்கள் பாலியல் தொல்லை அளித்தது குறித்து போலீசில் புகார் அளித்து நடவடிக்கை இல்லை. தற்போது புகாரை வாபஸ் பெற தவெக மாவட்ட செயலாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் நிர்வாகி தென் மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான பெண், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், மீன்வளத்துறை அமைச்சர் நாத்தின் நெருங்கிய நண்பரான ரூஸ்வெல்ட் மற்றும் நகர செயலாளராக இருக்கும் நிவாஷ் கண்ணன் ஆகியோர், தனக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த ஆக.13ல் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிபாஷ் என்பவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக பெண் நிர்வாகி மதுரையில் உள்ள தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் நேற்று அளித்த புகார் மனுவில், கடந்த 19ம் தேதி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரைட்டர், வக்கீல் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி, ‘மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு வந்து புகாரை திரும்ப பெற வேண்டும்’ என கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் நாங்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் மிரட்டி புகைப்படம் எடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். மாவட்ட செயலாளர் மீது கொடுத்த அனைத்து புகாரையும் வாபஸ் பெற வேண்டும் என பிரைட்டரின் உறவினர்களான வளன், போர்ஜியா ஆகியோர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாலியல் புகார் அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
பின்னர் பெண் நிர்வாகி கூறியதாவது, ‘‘அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பாலியல் தொல்லை ெகாடுத்த உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மறுக்கின்றனர். கடந்த 19ம் தேதி இரவு என்னை மிரட்டி என்னுடைய செல்போனையும் பறித்து சென்று விட்டனர். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’’ என்றார்.



