Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரயத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத்தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

2024-25 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக 2020-21 அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50 எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவை பருவங்களுக்கு ரூ.195 எனவும், 2023-24 அரவைப பருவத்திற்கு ரூ.215 எனவும் 2024-25 அரவை பருவத்திற்கு ரூ.349 எனவும் வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750லிருந்து ரூ.3,500 என உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2024-25 அரவை பருவத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரவை பருவம் நிறைவு பெற்றபின் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க ஏதுவாக 8 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

தமிழ்நாடு முதல்வரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையாக சுமார் ரூ.1,945.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.