கேட்காமலே இடஒதுக்கீட்டை கொடுத்தவர் கலைஞர் சமூக நீதிக்கான துரோகி யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேட்டி
விழுப்புரம்: சமூக நீதிக்கான துரோகி யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தியாகிகள் நினைவு நாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்பி கொளதம சிகாமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், சேதுநாதன், மாசிலாமணி, நிர்வாகிகள் சேகர், செஞ்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், மொழிப்போர் தியாகிகள் என்று அறிவித்து, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. கேட்காமலே இடஒதுக்கீட்டை கலைஞர் கொடுத்தார். எங்களுடைய ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தப்படவில்லை. எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் நாங்களும் பாதிக்கப்பட்டு, இதே இடத்தில் வந்து தங்கி உள்ளோம். அதிமுக ஆட்சியில்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதன்பிறகு யாரும் சீண்டாதபோது கலைஞர் ஆட்சியில் 1989ல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகளின் உயிரிழிப்பை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி கேட்பதற்கு என்ன காரணம்?. நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டு நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆணையத்தின் பரிந்துரைப்படிதான் இடஒதுக்கீடு கொடுக்க முடியும். 10.5 சதவீதம் கேட்டார்கள். ஆனால் நீதியரசர் ஆய்வில் மாணவர்கள் இதைவிட அதிக பலன் அனுபவிக்கிறார்கள் என்ற செய்தி வெளியே வரும்போது 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள். இது எதற்காக என்று தெரியவில்லை. சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினால், சிறையில் தான் இருக்க வேண்டும். நாங்களும் போராட்டம் நடத்தி சிறையில் 48 நாட்கள் இருந்துள்ளோம்.
பாமகவினர் 15,000 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தவர் கலைஞர். இப்போது சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள அன்புமணி, மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களை காப்பாற்றினாரா?. தன் கட்சியை சேர்ந்தவர்களையே அவரால் காப்பாற்ற முடியவில்லை. சமூக நீதிக்கான துரோகி யார்? என நாட்டு மக்களுக்கு தெரியும். நன்றியை மறப்பது என்பது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் குணாதிசயம். நன்றியை மறப்பதற்கு சிலருக்கு வெகு காலமாகும். இவர் உடனே மறந்துவிடுவார். இவ்வாறு அவர் கூறினார். வன்னியர்களுக்கு 10.5% வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி கேட்பதற்கு என்ன காரணம்? இப்போது சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள அன்புமணி, மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களை காப்பாற்றினாரா?.