Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பி.இ, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளவசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப்பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம்(ஜூன்) 6ம் தேதி ஆகும். அதேபோல், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் 9ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரேண்டம் எண் 11ம் தேதி வெளியிடப்படும். மேலும் அதே மாதம் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிசெய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டதும், கலந்தாய்வு குறித்த அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிடும் என அறிவித்திருக்கிறது. விண்ணப்பப்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இதேபோல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவையும் அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி, 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு நேரடி, 2ம் ஆண்டு மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்புகளுக்கு https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினரை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கும் www.tngasa.in என்ற இணையதளத்தில் வருகிற 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2ம், இதர பிரிவினர்களுக்கு ரூ.50ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் எச்.எல், மேண்டோ, ஆரோலேப், கவசவாகன தொழில் நிறுவனம் (ஏ.வி.என்.எல்), சி.காட், பிரேக்ஸ்இண்டியா மற்றும் டாடாஸ்ட்ரைவ் ஆகிய 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேர்கொள்ளப்பட்டது.