சென்னை: கனமழை காரணாக மண்டலம் 5-ல் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை, தலைமைச் செயலகம் எதிரே அமைந்துள்ள 60-வது வார்டு, அன்னை சத்யா நகர் மற்றும் பிராட்வே, பிரகாசம் சாலை, 56-வது வார்டு, திருவள்ளுவர் நகரில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையினால் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொட்டும் மழையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,
சென்னை மாநகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, நோய்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம்களை அமைக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் ராமுலு, மண்டல அலுவலர் விஜய்பாபு, மாமன்ற உறுப்பினர் பரிமளம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

