அமைச்சர் பதவி அனைவருக்கும் வழங்க முடியாது ராஜினாமா கடிதம் கொடுத்தால் உடனே ஏற்றுக்கொள்வோம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை
பெங்களூரு: அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக அதிருப்தி கொண்டு யாராவது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தால், உடனடியாக ஏற்று கொள்ளப்படும் என்று முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பல எம்எல்ஏக்கள் பதவி எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சரவை பட்டியலில் பெயர் இல்லை என்று தெரிந்ததும், அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஒரு சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்தனர். இது குறித்து பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமைச்சரவையில் யார் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் நான் எடுக்கவில்லை.
டெல்லி சென்று, கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி பல கோணங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. கட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சராகும் தகுதியும், திறமையும் உள்ளது.
இதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அனைவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க முடியாது. சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க முடியும். சிலர் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிலர் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதால், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி தலைமையை மிரட்டும் வகையில் செயல்படுவது சரியல்ல. அப்படி யாராவது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தால், உடனடியாக ஏற்று கொள்ளும்படி கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள வேண்டாம் என்றார்.


