புதுடெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உக்ரைன் மற்றும் போலந்துக்கு 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்படுகிறார். உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பயணத்தின்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவையும், போலந்து துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், பிராந்திய அளவிலான சமீபத்திய முன்னேற்றங்கள், இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கிய விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



