Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

முதுகுளத்தூரில் விதிமீறி நிறுத்தப்படும் மினி பஸ்களால் இடையூறு

சாயல்குடி: முதுகுளத்தூர் பஸ் நிலையம் பகுதியில் விதிமீறி நிறுத்தப்படும் மினி பஸ்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை மையமாக கொண்டு 57 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிதம்பரம், நாகை உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, கடலாடி, சாயல்குடி போன்ற உள்மாவட்ட பகுதிகளுக்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தனியார் பஸ்கள், விரைவு பஸ்களும் இயக்கப்படுகிறது. முதுகுளத்தூர் பஸ் நிலையத்தை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய 3 தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து குக்கிராம போக்குவரத்திற்காக 8-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விதிமுறைப்படி மினி பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல அனுமதியில்லை. பஸ் நிலையத்தின் வெளிப்புறத்தில் அல்லது அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். இதற்கு வசதியாக, முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலைய நுழைவு வாயில் எதிரே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில மினி பஸ்கள் உரிய இடத்தில் நிறுத்தப்படாமல், பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில், அதாவது புறக்காவல் நிலையம் எதிரே நிறுத்துகின்றனர்.

ஒரே நேரத்தில் சுமார் 4 மினி பஸ்களை நிறுத்தி வைப்பதால், பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் வெளியேறி செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.