தாவரங்களில் துத்தநாகத்தின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட `எக்ஸோ-பாலிசாக்கரைடு அடிப்படையிலான கிலேட்டட் துத்தநாக உரம்’ தொடர்பான காப்புரிமையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இந்த காப்புரிமை இந்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தால் 574341 என்ற எண் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முனைவர் யாழினி, தியாகேஸ்வரி, ஆனந்தம், செல்வி, மாரிமுத்து, மணிகண்டன் மற்றும் சித்ரா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் காப்புரிமை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் டாக்டர் பட்ட மாணவர் மேற்கொண்ட ஆய்வின் முடிவாக உருவாக்கப்பட்டது.
இந்த ஆய்வில், நிலையான வேளாண்மைக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த எக்ஸோ-பாலிசாக்கரைடு (EPS) எனப்படும் பொருளைப் பயன்படுத்தி, புதுமையான கிலேட்டட் துத்தநாக உரம் உருவாக்கப்பட்டது. சோடிக் தன்மை கொண்ட நெல் வயலின் வேர்ப்பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பேசிலஸ் பாராலிச் செனிஃபார்மிஸ் என்ற நன்மை பயக்கும் பாக்டீரியாவின் செல் சுவரில் இருந்து இந்த எக்சோ பாலிசாக்கரைடு பிரித்தெடுக்கப்பட்டது. துத்தநாக அயன்களைப் பிணைக்கும் திறனை இந்த எக்சோ பாலிசாக்கரைடு கொண்டுள்ளதால் 16.8 சதவீத துத்தநாகம் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய துத்தநாக நுண்ணூட்ட உரம் தயாரிக்க உதவுகிறது. இந்தப் புதிய துத்தநாக உரத்தைப் பயன்படுத்தியதில், வழக்கமாக பரிந்துரைக்கப்படும் இவ்வகை உரங்களை விட தாவர வளர்ச்சியும் விளைச்சலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. இது எளிதில் சிதையும் தன்மை கொண்டது. மேலும் துத்தநாகத்தைச் சிறப்பாக பிணைத்து தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கும் பண்புகளால், துத்தநாகக் குறைபாடுகளை சமாளித்து, செயற்கை கிலேட்டர்களுக்கு மாற்றான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாக அமைகிறது. நீடித்த சத்து மேலாண்மையையும் பயிர்களுக்கு வழங்குகிறது.
இந்தக் காப்புரிமைப் பெற தேவையான மனு தயாரித்தல் முதல், காப்புரிமை வழக்கறிஞருடன் சேர்ந்து அதைச் சமர்ப்பிக்கும் வேலை வரை அனைத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலில் செய்யப்பட்டது. முனைவர் நடராஜன் ஒருங்கிணைப்பாளராக செய்யப்பட்டார். இந்தக் கண்டுபிடிப்பின் காப்புரிமை பெற்றவர்களுக்கு துணைவேந்தர் தமிழ்வேந்தன் பாராட்டு தெரிவித்தார்.

