Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவப் பயிற்சி கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த செப்டம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்ற தேர்வில் 272 பேர் பங்கேற்றனர்.

அப்போது, கரண்குமார் என்பவருக்குப் பதிலாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோகிதாஸ் என்பவர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அதே தேர்வில் ஆக்ராவைச் சேர்ந்த மோகர் சிங் மற்றும் நரேஷ்குமார் மீனா ஆகிய இருவரும் தங்களது இருக்கைகளை மாற்றிக்கொண்டு தகவல்களைப் பரிமாறி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேர்வுவாரிய தலைமை அதிகாரியும் கர்னலுமான அபிலாஷ் சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், வெலிங்டன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரோகிதாஸ், மோகர் சிங், நரேஷ்குமார் மீனா ஆகிய 3 பேரையும் கடந்த 5-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இச்சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விஸ்வ பிரதாப் தூபே மற்றும் பண்டி குண்டால் ஆகிய மேலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் போலியான அடையாள ஆவணங்களுடன் தேர்வு எழுத முயன்றபோது, அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பயோமெட்ரிக் சோதனையில் ஆள்மாறாட்டம் தொடர்பான முறைகேடு அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.