Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு; ஈரானின் 20,000 டாலர் ட்ரோனை அழிக்க 40 லட்சம் டாலர் ஏவுகணையை பயன்படுத்தும் அமெரிக்கா: பொருளாதாரத்தை சிதைப்பதால் டிரம்புக்கு நெருக்கடி

புதுடெல்லி: மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் வல்லரசு நாடுகளின் ராணுவ பலம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தின. ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மிகத்தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னிலையில் இருந்தாலும், ஈரான் தனது குறைந்த விலை ட்ரோன்கள் மூலம் எதிரிகளின் பொருளாதாரத்தை சிதைக்கும் திட்டமிடல் செய்துள்ளது. சுமார் 20,000 டாலர் மதிப்பிலான ‘ஷாஹெட்’ வகை ட்ரோன்களை ஈரான் ஏவும்போது, அதை தடுக்க இஸ்ரேல் 20 லட்சம் முதல் 40 லட்சம் டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பு கவசங்கள் சில வாரங்களில் காலியாகும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரானிடம் உள்ள ‘பட்டா’ எனப்படும் அதிவேக ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. அமெரிக்கா தனது 13,000 போர் விமானங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இஸ்ரேல் நாட்டிடம் 597 போர் விமானங்கள் மற்றும் 1,70,000 வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு சவால் விடும் வகையில் ஈரான் தனது 6,10,000 வீரர்களையும், ஏவுகணை நகரங்கள் எனப்படும் நிலத்தடி பதுங்கு குழிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. தற்போதைய போர் சூழல் குறித்து சர்வதேச ராணுவ ஆய்வாளர் கூறுகையில், ‘ஈரான் தனது பரந்த நிலப்பரப்பை பயன்படுத்தி நீண்ட கால போருக்கு தயாராகி வருகிறது. அமெரிக்காவின் எப்-22 மற்றும் இஸ்ரேலின் எப்-35 ரக விமானங்கள் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஈரான் தனது மலிவு விலை ஆயுதங்கள் மூலம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை முடக்க பார்க்கிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தை ஈரான் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது. இது உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை’ என தெரிவித்துள்ளார்.

சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் நவீன டிரோன் தாக்குதல்களை ஈரான் ஒருங்கிணைத்து வருகிறது. அமெரிக்கா தனது ‘லூகாஸ்’ ரக ஆளில்லா போர் விமானங்களை களமிறக்கியுள்ள நிலையில், இந்த மோதல் ஒரு நீண்ட கால போராக மாறும் சூழல் உருவாகியுள்ளது. ஆரம்பகட்ட தாக்குதலில் அமெரிக்க கூட்டணிக்கு வெற்றி கிடைப்பது போல் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் ஈரானின் பிடிவாதம் போரின் போக்கை மாற்றக்கூடும் என கருதப்படுகிறது. தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.