கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை சார்பில் உணவு மற்றும் இயற்கை பொருட்கள் புத்தாக்க கண்காட்சி நடத்தப்பட்டது. உணவு தொழில்நுட்பம் மற்றும் இயற்கை பொருட்கள் மேம்பாட்டில் முன்னேற்றங்கள், நிலையான தீர்வுகள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றை மையக்கருத்தாக வைத்து நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.முனைவர் கோகிலாதேவி வரவேற்றார். முனைவர் செந்தில் அறிமுக உரை நிகழ்த்தினார். தற்காலிக துணைவேந்தர் சுப்பிரமணியன் பாராட்டுரை வழங்கினார். `மைக்ரோகிரீன்ஸ்’ குறித்த முதல் தொழில்நுட்ப அமர்வுக்கு விதை மைய இயக்குநர் உமாராணி தலைமை தாங்கினார். காய்கறி அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் இந்துராணி, இணை பேராசிரியர் வனிதா ஆகியோர் மைக்ரோகிரீன்களின் சிறப்புகள் குறித்து பேசினர். மேலும் மைக்ரோகிரீன் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள அறிவியல் கொள்கைகளை பேச்சாளர்கள் விளக்கினர். அவற்றின் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, வளர்ச்சி சுழற்சி மற்றும் உட்புற மற்றும் மொட்டை மாடி விவசாயத்திற்கு ஏற்றது என்பதையும் வலியுறுத்தினர்.
இரண்டாவது தொழில்நுட்ப அமர்வு `இயற்கை பின்புறத் தோட்டம் மற்றும் மொட்டை மாடி தோட்டக்கலை’ என்ற தலைப்பில் நடைபெற்றது. நிலையான உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தோட்டக்கலை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பிற்பகல் அமர்வுக்கு `கற்றாழை அய்யா” என்று அழைக்கப்படும் ராம சண்முகம் தலைமை தாங்கினார். இயற்கை சிகிச்சைமுறை மற்றும் கற்றாழை சார்ந்த பயிற்சியாளருமான இவர் தனது அனுபவத்திலிருந்து, மருத்துவ தாவரமான கற்றாழையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரிய மற்றும் நவீன சுகாதார நடைமுறைகளில் அதன் பங்கு குறித்தும் விளக்கினார். விழாவில் 7-13 வயதுடைய பள்ளிக் குழந்தைகளுக்காக பூமி - என் விழிகளின் வழியில் என்ற கருப்பொருளில் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கில் தீ இல்லா சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு அரங்குகளில் அமைக்கப்பட்ட காட்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த மூன்று அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோயம்புத்தூர் (தெற்கு) வருவாய் கோட்டாட்சியர் மாருதி பிரியா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் செந்தில், தோட்டக்கலைத்துறை டீன் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

