Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

எம்ஜிஆர், ஜெயலலிதா வென்ற தொகுதியில் டிடிவி மனைவிக்கு சீட்? உள்ளடி வேலைக்கு அதிமுக ரெடி

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதிக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. திமுகவில் தீவிரமாக செயல்பட்ட லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கடந்த 1962ல் தேனி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். எம்ஜிஆர் அதிமுகவை துவக்கிய பிறகு, 1980ல் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், எம்ஜிஆர் உடல் நலம் பாதித்து அமெரிக்காவில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றபோது 1984ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1989ல் எம்ஜிஆரின் மனைவி ஜானகி இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியை தழுவினார். அவரை திமுக வேட்பாளர் ஆசையன் வீழ்த்தினார். இதன்பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. 1991ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தவசியும், 1996ல் திமுக சார்பில் ஆசையனும் வெற்றி பெற்றனர். 2001ல் அதிமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து 2002ல் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா அதிமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006ல் நடந்த தேர்தலிலும் ஜெயலலிதாவே இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016லும் தங்க தமிழ்ச்செல்வன் இங்கு வெற்றி பெற்றார். 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்ட நிலையில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, 2019ல் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2021ல் நடந்த பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார்.

ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக 9 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட ஆண்டிபட்டி தொகுதியை திமுக தரப்பில் அசைத்து விட்டனர். கடந்த இரு முறையாக தொடர்ந்து திமுக வேட்பாளரே இங்கு வெற்றி பெற்றுள்ளார். இருந்தாலும் இந்த முறை அதிமுக சார்பில் இங்கு போட்டியிட பலரும் தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர். குறிப்பாக கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் முறுக்கோடை ராமர், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தேனி மாவட்ட அதிமுகவில் கடும் கோஷ்டி மோதல் நிலவிவரும் நிலையில், தேர்தல் வேலைகளில் தொண்டர்கள் தரப்பில் போதுமான உற்சாகம் இல்லை. அதே நேரம் எலியும், பூனையுமாக இருந்த டிடிவி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றாகியுள்ளனர். இதனால், இந்த முறை ஆண்டிபட்டி தொகுதி டிடிவி.தினகரனின் அமமுகவிற்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சு வேகமாக பரவி வருகிறது. இது அதிமுகவினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அவர், தனது மனைவியை இந்த தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்த டிடிவி.தினகரன், எடப்பாடியுடன் இணைந்ததை பெரும்பாலான கட்சியினர் விரும்பவில்லை. அதேநேரம் டிடிவி.தினகரன் தரப்பு இங்கு போட்டியிடுவதை அதிமுகவினர் விரும்பவில்லை. இதனால், அமமுகவுக்கு இங்கு சீட் கொடுத்தால் உள்ளடி வேலையில் இறங்க அதிமுகவினர் தயாராக உள்ளனர். 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியை பொறுத்தவரை அமமுக வேட்பாளரான டிடிவி.தினகரன் 2ம் இடம் பிடித்தார். அதிமுகவிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது. இதனால், ஆண்டிபட்டியில் அமமுக தான் பெரிய கட்சி, எங்களுக்கு தான் சீட் என டிடிவி தரப்பு வேகம் காட்டுவது அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.