மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோ: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வட அமெரிக்காவின் மெக்சிகோவில் சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகரில் உள்ள வால்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சோனோரா ஆளுநர் அல்போன்சோ துராசோ சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சோனோரா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு ஆதரவு குழுவை அனுப்புமாறு உள்துறை செயலாளருக்கு அறிவுர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் ஏற்பட்ட நச்சு வாயுக்களை சுவாசிப்பதால் இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.