அவகாடோ பழமரங்கள் காமராஜர் காலத்துலர்ந்தே இருக்கு. அப்போ ஒரு கிலோ பழம் 1 ரூபாய்க்கு கூட விற்காது. இப்போ ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்குது” என்று அவகாடோ பழங்கள் தொடர்பான ஒரு அட்டகாசமான தகவலோடு பேச ஆரம்பித்தார் மூத்த விவசாயியான ரவிச்சந்திரன். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள தாண்டிக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவகாடோ பழமரங்களை வளர்த்து வரும் இவர், காபி, மலைவாழை, அவரை, சவ்சவ் எனப் பலபயிர் வேளாண்மையில் சாதித்து வருகிறார். சாதாரண நாட்களிலேயே குளிரால் நடுங்கும் இந்த ஏரியா, இப்போது எப்படி இருக்கும் என விளக்கத் தேவையில்லை. குளுரும் பனியும் கலந்த ஒரு காலைப்பொழுதில் ரவிச்சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.
“ஆக்சுவலா அவகாடோ பழங்களோட பூர்விகம் மெக்சிகோதான். நம்ம ஆளுங்களுக்கு இதைப்பத்தி சரியா எதுவும் தெரியாது. ஒரு காலத்துல அதை எங்க பகுதிகள்ல சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க. உள்ளூரில் காசு கொடுத்து வாங்கறதுக்கு ஆளில்லாத சூழல்ல, விவசாயிகள் கொடைக்கானலுக்கு கொண்டுபோய் வித்தாங்க. சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டுக்காரங்க அவகாடோவை நல்ல விலைக்கு வாங்கினாங்க. அப்டித்தான் இந்தப் பகுதில அவகாடோ பிரபலமாச்சு. 1994ல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் தடியன்குடி டிகேடி 1 என்கிற அவகாடோ ரகத்தை வெளியிட்டாங்க. அவகாடோ கன்றை 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடணும். 1 ஏக்கர்ல 100 கன்று நடலாம். பலபயிர் செய்யும்போது ஏக்கருக்கு 50 கன்று நடலாம். அரசு தோட்டக்கலை பண்ணை பட்டலங்காடு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இங்கல்லாம் விதைக்கன்றுகள் விற்பனை செய்றாங்க. விவசாயிகள் கீழே விழுந்த பழங்களை விதைக்காக குடுப்பாங்க.
நானும் டெண்டர் எடுத்து 3 ஆண்டுகள் விதைக்கன்று கொடுத்திருக்கேன்” என்ற ரவிச்சந்திரன், அவகாடோ பழமரங்களின் வளர்ப்பு குறித்தும் பேச ஆரம்பித்தார். “மத்த பழ மரங்களைக் காட்டிலும் அவகாடோவுக்கு பராமரிப்பு குறைவா இருந்தாலே போதும். கவாத்து அதிகம் இல்லை. இயற்கை உரம் வச்சா போதும். விதைக்கன்று நட்டதிலிருந்து 5 வருஷத்துல பூக்கும். பூத்ததிலிருந்து ஆறாம் மாதம் காய்க்கும். ஒரு காய் 600 கிராம் முதல் ஒன்றேகால் கிலோ வரை எடை இருக்கும். ஜூலை முதல் ஜனவரி வரை காய்க்கும். 65 அடி உயரம் வரை கூட வளரும். பழம் பறிக்க மரத்தில் ஏறி உயரத்தில் நின்று 15 அடி மூங்கில் குச்சிகளில் நுனியில் வலை கட்டி இறக்கி விட்டுவிடுவார்கள். இந்தப் பகுதியில 10லர்ந்து 12 லட்சம் அவகாடோ மரங்கள் இருக்கு. மலைப்பகுதி மட்டுமின்றி தென்னந்தோப்பிலும் ஊடுபயிராக செய்யலாம். அதுக்கு மைக்ரோ க்ளைமேட், அதாவது குளிர்ந்த தோட்டக் காலநிலை இருக்கணும். தென்னங்கீற்றில் செடிகளை மறைத்து தண்ணீர் தெளிக்கணும். புதுசா அவகாடோ மரம் நடுபவர்களின் நிலத்தில் 20 அடியில் டாப்பிங் பண்ணிட்டு மட்டம் போட்டு வளத்தால் நல்லது. இதனால ஆர்கானிக் மருந்து தெளிக்கவும், பழம் பறிக்கவும் எளிதாக இருக்கும்’’ என்றவர், அவகாடோ குறித்து மேலும் சில தகவல்களை அடுக்க ஆரம்பித்தார்.
``அவகாடோவுல பல ரகம் இருக்கு. காஸ், ஃபிஙர்டன், சவுத் ஆஃப்ரிக்கன் ரீட், பொல்லாக் போன்ற ரகங்களை சமவெளிகளில் வளர்க்கலாம். அவகாடோ மரத்துல, ஏ டைப் , பி டைப்னு ரெண்டு வகை இருக்கு. ஏ டைப், பி டைப் ரெண்டு வகையும் இருந்தால்தான் மகரந்தச்சேர்க்கை நடக்கும். ஏ டைப்பில் ஆண் பூ, பி டைப்பில் பெண் பூ என மாறி மாறி பூக்கும். சிலவகை அவகாடோவை கலந்து நடுதல் நல்லது. நிழல் பராமரிப்பு, நீர்ப்பதம் குறைவு, மல்ச்சிங், அளவான நீர்ப்பாசனம் எல்லாம் அவகாடோ வளர்ப்பில் முக்கியம். அவகாடோவில் சில நேரம் டீ மஸ்க்கிட்டோ ப்ளை பூச்சித்தாக்குதல் இருக்கும். இந்த பிரச்னை வந்தா பூ பூத்து பழம் விழும்போது ஓட்டை போட்டுடும். விளைச்சல் அதிகமா இருக்கும் நேரங்கள்ல வாடல் நோய் தாக்குதல் இருக்கும். தண்டுத்துளைப்பான் வரும் வாய்ப்பும், மரம் பட்டுப்போவதும் உண்டு. பழைய மரங்கள் வாடி வீழ்ந்துவிடும். அப்டிவிழுந்தா, ஒரு மரம் போனால் இன்னொரு மரம் நடவு பண்ணிக்கிட்டே இருக்கோம். புதுப்புது கன்றுகளும் நடவு செய்கிறோம்” என்றார். (ரவிச்சந்திரனின் அவகாடோ மற்றும் சில பயிர் பராமரிப்பு முறைகள் குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்)
தொடர்புக்கு:
ரவிச்சந்திரன்: 97878 88503.

