Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைகயில் இருந்து நீரை திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து இருந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் நேர்வில் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்:

* மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்திருத்தல் வேண்டும்.

* தேவைப்படும் பட்சத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

* காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் நேர்வில், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, நீந்துவது, மீன் பிடிப்பது மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு செல்பி எடுப்பதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும், ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும், பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

* காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் போது, கால்நடைகளுடன் நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

* பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்திகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்த்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

* ஆற்று நீரை கடந்து செல்ல பயன்படும் தரைப்பாலங்கள் மற்றும் பிற பாதைகளை கண்டறிந்து பொதுமக்களை எச்சரிக்க வேண்டும்.

* முன்னெச்சரிக்கை வழங்கும் போது பொதுமக்களிடையே எவ்விதமான தேவையற்ற அச்ச உணர்வும் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென்மேற்கு பருவமழையின் காரணமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சார்ந்த 365 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் மீட்பு படைகள் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1970 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.